தும்மக்குண்டு ஊராட்சியில் தார்ச்சாலை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

வருசநாடு, அக். 15: வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் கிராமத்தில் ஏராளமானோர் வசிக்கின்றனர். கடந்த 60 ஆண்டு காலமாக இந்த கிராமத்தில் உரிய சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.

சாலை வசதி இல்லாததால் பீன்ஸ், அவரை, எலுமிச்சை, கொட்டை முந்திரி, இலவம் பஞ்சு உள்ளிட்ட விளை பொருட்களை கொண்டு செல்வதில் விவசாயிகள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து கிராமவாசி ரமேஷ் கூறுகையில், ‘‘கிராம சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது.

மேலும் தற்போது மழை பெய்து வருவதால் சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. புதிய தார்ச்சாலை அமைக்கக் கோரி ஏற்கனவே ஊராட்சி ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் சாலைகளில் மண் அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக மாறிவிட்டது. எனவே விரைவில் தார்ச்சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார்.

The post தும்மக்குண்டு ஊராட்சியில் தார்ச்சாலை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: