×

உறங்கும் பூதம் AI தொழில்நுட்பம்!

நன்றி குங்குமம் தோழி

“நான் உங்கள் அடிமை. நீங்கள் சொன்னதைச் செய்வது எனது கடமை. மஹா பிரபு ஆணையிடுங்கள். வேண்டியதைத் தருகிறேன்” என்றவாறு ‘அலாவுதீன் அற்புத விளக்கு’ படத்தில் பூதம் சொன்னதும், நடிகர் கமல் “எனக்கு ரொட்டியும் கோழியும் வேண்டும்” என்பார். அடுத்த நொடியே பூதம் ஒரு கையில் ரொட்டியும் இன்னொரு கையில் உயிரோடு கோழியும் வைத்திருக்கும். “இதை எப்படி சாப்பிடுவது… பொரித்த கோழி வேண்டும்” என மீண்டும் சொன்னதும், அடுத்த நொடியே பூதம் பொரித்த கோழியோடு நிற்கும்.‘‘இது மாதிரிதான் AI தொழில்நுட்பமும். உறங்கும் இந்த பூதத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது நம் கைகளில்தான் இருக்கிறது. AI என்கிற இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பூதத்தை வேலை வாங்காமலே விட்டுவிட்டால் அது உறங்கிக் கொண்டேதான் இருக்கும். சரியான முறையில் இதை நாம் வேலை வாங்க வாங்க சிறப்பாக தகவல்களை டெக்ஸ்டாகவும், வீடியோ ஆடியோ, இசை எனத் திரட்டி எடுத்துக் கொண்டுவந்து கொடுக்கும்’’ எனப் பேச ஆரம்பித்தவர் AI தளத்தில் இயங்கி வரும் ISR செல்வகுமார்.‘‘AIல் இரண்டு இருக்கிறது. இதில் அலெக்சா, எலிசா போன்ற செயலிகள் தானாக எதையும் எழுதாது.

ஏற்கனவே புரோக்ராம் செய்து இருப்பதை மட்டுமே கொண்டு வந்து நம்மிடம் உரையாடும். இன்னொன்று தானாகவே உருவாக்கும்(Generative) முறை. நம் தேவை என்ன என்பதை தெளிவாக பிராம்டிங் செய்து சொல்லிவிட்டால், அதுவாகவே ஜெனரேட் செய்து கொண்டுவந்து வித் இன் செகண்டில் நமக்குக் கொடுக்கும். ‘இது சரியாக இல்லை. இன்னும் கொஞ்சம் விரிவாகக் கொடு அல்லது மாற்றிக் கொடு’ என்றால் மாற்றி எழுதும். அல்லது
கூடுதல் தகவல்களைக் கொடுக்கும். இதுதான் ஜெனரேட்டிவ் தொழில்நுட்பத்தின் சிறப்பு. நம் தேவை இதுதான் என்பதை முதலில் AIக்கு புரிய வைக்க வேண்டும். பிறகு இதனிடம் வேலை வாங்குவது ரொம்பவே சுலபம்.ஓப்பன் AI நிறுவனம் அறிமுகப்படுத்தியது ChatGpt. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது GoPilot. கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது Gemini. இதில் சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி இரண்டும் டெக்ஸ்ட் பேஸ்டு AI. எல்லாவற்றையும் டெக்ஸ்டாகத்தான் நம்மிடம் கொடுக்கும். ஆனால் மைக்ரோசாஃப்ட்டின் கோபைலட் AI தேவையான படங்களை உருவாக்குவது, இசை அமைப்பது, வீடியோ உருவாக்கம் என எல்லாமுமாகப் பயன்படுகிறது.‘இன்றைக்கு ஒரு மணி நேரத்திற்கு நீதான் என் எஃப்.எம்மில் ஆர்ஜே. இன்று மழை வரப்போகிறது. எனவே மழை குறித்த தகவல்கள், மழை பாட்டெல்லாம் போட்டு நிகழ்ச்சியை நடத்து’ என கட்டளையை பிறப்பித்துவிட்டால் போதும்.

1 மணி நேரத்திற்கு தலைவன் தானாகவே மழை பாடல்களை தேர்ந்தெடுத்து போட்டு, மழை குறித்த வானிலைத் தகவல்களை சொல்லிக்கொண்டு வேலை செய்து முடிக்கும். நமக்குப் பிடித்த மாதிரியான ஆர்.ஜே.வின் படத்தை நாமே உருவாக்கி, வாய் அசைக்க வைத்து ஒரு நபர் இருப்பது மாதிரியும் இதைச் செய்யலாம். AI தொழில்நுட்பம் சீனர்களின் முகம், ஜப்பானியர்களின் முகம், ஆப்பிரிக்க நாட்டவர்களின் முகம், இந்தியர்களின் முகங்களை சரியாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மனித முகங்களையும் பிராந்தியத்திற்கு (regional) ஏற்ற மாதிரியான முக அமைப்பில், அதே ஸ்கின் டோனில்தெளிவாக வரையவும் ஆரம்பித்துவிட்டது.தற்போது AI துறையில் வீடியோ கிரியேஷன் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. முன்பு 2 நிமிடங்கள் மட்டுமே உருவாக்க முடிந்த காணொளிகளை இன்று 40 நிமிடங்களுக்கு உருவாக்க முடிகிறது. இதற்கென சில இலவச AI தளங்கள் இன்டர்நெட் முழுக்க விரவிக் கிடக்கிறது. ஹிட்ஹப் (GitHub), ஹக்கிங் ஃபேஸ் (Hugging Face) என்கிற இரண்டு பாப்புலர் தளங்கள் இதில் செயல்படுகின்றன. இதற்குள் நுழைந்தால் இலவச AI தளங்கள் ஆயிரக்கணக்கில் கிடைக்கும். யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தொழில்நுட்பத்தை மேம்படுத்தலாம். உருவாக்கலாம். கவனம், சில இவற்றில் ஃபேக்காகவும் இருக்கும்.

AI ஒன்றினை திறமையுள்ளதாக மாற்ற பிராம்டிங் பை டைப்பிங். பிராம்டிங் பை வாய்ஸ் என இருமுறைகளில் இதனைப் பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து AIயுடன் நாம் பிராம்டிங் முறையில் உரையாட அது தன்னை வளர்ச்சி அடையச் செய்கிறது என்பதே இதில் நிதர்சனம். யுவர் பிராம்டிங் இஸ் குட். யுவர் AI இஸ் குட். யுவர் பிராம்டிங் இஸ் ஆவ்ரேஜ்’’ என்றவர், ‘‘யுவர் AI இஸ் ஆல்சோ ஆவ்ரேஜ். நம் தேவை தெளிவாக இருந்து அதற்கான விஷயங்கள் பிராம்டிங் வழியே கட்டளையாய் சரியாகக் கொடுக்கப்பட்டால் AI தொழில்நுட்பம் நமக்கு ரொம்பவே பயனுள்ளது’’ என்கிறார் அழுத்தமாக.‘‘ஒரு நபரின் உடை இப்படியாக இருக்க வேண்டும். அவரின் ஹேர் ஸ்டைல் இப்படி இருக்க வேண்டும். அவர் போடப் போகும் அணிகலன்கள், அவரின் ஸ்கின் டோன் என எல்லாவற்றையும் AI இடத்தில் பிராம்டிங் வழியாகச் சொல்லச் சொல்ல, நாம் கொடுக்கும் கட்டளையை வித் இன் செகண்டில் உருவாக்கி கொடுத்துவிடும். அதிலும் கூடுதலாக மாற்றம் அல்லது திருத்தம் வேண்டுமெனில், அதையும் பிராம்டிங் வழியாக சொல்லலாம். அடுத்த நொடியே அந்த திருத்தத்தையும் செய்துகொண்டு வந்து கொடுக்கும்.
AI இயங்குவது எல்லாமே அடிப்படையில் டேட்டாதான்.

அதாவது, ஆடியோவாக, வீடியோவாக, இமேஜாக எல்லாவற்றையும் பார்மெட்டாகவே தனக்குள் வைத்திருக்கும். இதற்கு பெயர் பிக் டேட்டா. இதில் இருந்துதான் எல்லாவற்றையும் AI எடுத்துக் கொள்கிறது.நீங்கள் ஒரு டாக்டர் எனில் உங்கள் AI க்கு நீங்கள்தான் டாக்டர் பாஸ்! நீங்கள் ஒரு மீடியா நபர் என்றால் உங்கள் AIக்கு நீங்கள் ஒரு மீடியா பாஸ்! நீங்கள் ஒரு மளிகைக்கடை நடத்துபவர் எனில் உங்கள் AIக்கு நீங்கள் மளிகைக்கடை பாஸ்!இப்போதைக்கு நீ டாக்டர். நீ ஹெச்.ஆர். நீ ஒரு இதழின் எடிட்டர் என்பதை சொல்லிவிட்டு அதனிடம் வேலை வாங்கினால், அந்த கேரக்டராகவே மாறி நாம் சொல்கிற வேலைகளை பக்காவாக செய்து கொடுக்கும். சுருக்கமாக ‘எந்திரன்’ படத்தில் வரும் சிட்டி ரோபோ மாதிரி.மிகச் சமீபத்தில் சென்னையில் நடந்த முப்பெரும் விழா மேடையில் கலைஞர் அருகே தமிழக முதல்வர் அமர்ந்திருப்பது போலவும், கலைஞரே விழாவில் பங்கேற்று நடப்பு நிகழ்வுகளை பேசுவது போலவும் அவரின் குரல், வாய்ஸ் குளோனிங் முறையை பயன்படுத்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

ஒருவரின் குரலை குளோன் செய்ய, ஏற்கனவே அவர் பேசிய குரல் இருந்தால் சுலபமாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.இதேபோல் தேசியத் தலைவர்கள் தங்களின் தாய்மொழி அல்லது ஆங்கிலத்தில் பேசியதை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழுக்கு மொழி பெயர்த்து அவரே தமிழில் பேசுவது போலவும் செய்ய முடியும். இதில் மொழி பெயர்ப்பாளராய் ஒருவர் மேடையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், மொழியாக்கம் சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க இந்தியும் தமிழும் தெரிந்த நபர் தேவை.‘வேற்று மொழியில் உள்ள ஒரு புத்தகத்தை தமிழுக்கு மொழி பெயர்த்துக் கொடு. இந்த புத்தகத்தில் உள்ள சாரத்தை சுருக்கமாக பத்து வரிகளில் எழுதிக் கொடு. இந்தப் புத்தகத்தின் பத்தாவது பக்கத்தில் உள்ளதை மட்டும் எடுத்துக் கொடு. வீடியோவின் 20வது நிமிடத்தில் இருந்து 26வது நிமிடம் வரை பிரதமர் மோடி பேசியிருப்பதை மட்டும் எடுத்துக்கொடு’ என பிராம்டிங் வழியாக AIக்கு கட்டளைகளை போடப் போட அடுத்த நொடியே நாம் கேட்டது கிடைக்கும்.AI தொழில்நுட்பத்தை யாரும் இதுவரை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. ஒரு மென்பொருளை எல்லோரும் பயன்
படுத்த பயன்படுத்ததான் அது ஒரு புரிதலுக்கு வரும்’’ என்றவாறு விடைபெற்றார்.

AI ஒன்றினை திறமையுள்ளதாக மாற்ற பிராம்டிங் பை டைப்பிங். பிராம்டிங் பை வாய்ஸ் என இருமுறைகளில் பயன்படுத்தலாம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post உறங்கும் பூதம் AI தொழில்நுட்பம்! appeared first on Dinakaran.

Tags : Kamal ,Dinakaran ,
× RELATED டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு முதல்வருக்கு கமல் பாராட்டு