×

ஒரு புன்னகைக்காக தலைமுடியை தானம் செய்யும் பெண்கள்!

நன்றி குங்குமம் தோழி

தலைமுடி உதிர்தல் என்பது பெண்களின் மிகப்பெரிய பிரச்னை. அதை நினைத்துதான் அவர்கள் பெரும் கவலைப்படுவார்கள். அதற்காக என்ன செய்யலாம் என்பது குறித்து அவர்கள் ஆராய ஆரம்பிப்பார்கள். ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் கீமோதெரபி என்ற சிகிச்சை காரணமாக ஏற்படக்கூடிய பின்விளைவுகளில் முக்கியமானது முடி உதிர்வு பிரச்னை.இந்த சிகிச்சை காரணமாக அவர்கள் தங்களின் முடி அனைத்தும் இழந்து கிட்டத்தட்ட அவர்களின் தலை வழுக்கையாகிவிடும். ஒவ்வொருவருக்கும் தலைமுடி என்பது தன்னம்பிக்கையின் அடையாளம். அது முழுமையாக நீங்குவதால், அவர்கள் மொத்த தன்னம்பிக்கையும் இழந்துவிடுகிறார்கள். குறிப்பாக பெண்கள்.

புற்றுநோய் காரணமாக தலைமுடி முழுவதையும் இழந்து தவிக்கும் பெண்களுக்கு இயற்கையான ஹேர் விக்கை வடிவமைத்து வழங்கி வருகிறார் ஐதராபாத் ஹேர் டொனேஷன் ஃபார் கேன்சர் பேஷன்ட் (Hyderabad Hair Donation For Cancer Patients Organization) என்ற தொண்டு அமைப்பின் நிறுவனர் ஷிவா. “நான் அடிப்படையில் ஹேர் ஸ்டைலிஸ்ட். சிகை அலங்காரம் செய்வதுதான் என்னுடைய வேலை. பார்லரில் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டைலிங் செய்யும் போது, துண்டிக்கப்படும் முடிகள் அனைத்தையும் குப்பைகளில்தான் வீசுவோம்.

அதனை குப்பையில் வீசாமல் உபயோகமான பொருளாக மாற்றினால் என்ன என்று தோன்றியது. பல்வேறு காரணங்களால் முடியினை முற்றிலுமாக இழந்து தவிப்பவர்களை பற்றி நினைத்தேன். அவர்களுக்கு உதவும் வகையில் இதனை விக்காக மாற்ற முடிவு செய்தேன். அப்போதுதான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தலைமுடியினை இழந்து தவிப்பது குறித்து தெரியவந்தது. அவர்களுக்கு நோயின் பாதிப்பினை குறைக்க கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படும். அந்தக்காலக்கட்டத்தில் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவு காரணமாக தலைமுடி முழுவதும் கொட்டிவிடும். தலைமுடி இல்லாமல் தங்களின் தோற்றம் அவலட்சணமாக இருக்கும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டு, மனமுடைந்து தன்னம்பிக்கையை இழந்து போவார்கள்.

இவர்களுக்கு உதவும் வகையில் இயற்கையான முடியினைக் கொண்டு விக் செய்து கொடுத்தால் அவர்களின் முகத்தில் புன்னகையை பார்க்க முடியும் என்று தோன்றியது. என் வாடிக்கையாளர்களிடம் அது குறித்து தெரிவித்தேன். விருப்பமுள்ளவர்கள் அவர்களின் தலைமுடியின் சராசரி நீளத்தினை குறைத்துக்கொள்ள முன்வந்தார்கள். அதனை சேகரிக்க ஆரம்பித்தேன். மேலும் தலைமுடி தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். பலர் தானம் செய்ய முன்வந்தனர். அந்த தலைமுடிகளை பல ஆய்வுகளுக்குப் பிறகு அழகான விக்காக மாற்றி அதனை தலைமுடியை முற்றிலுமாக இழந்தவர்களிடம் சேர்த்தோம்’’ என்ற ஷிவா, இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் சென்று தலைமுடியினை தானமாக பெற்று வருகிறார்.

“நான் ஐதராபாத்தில் வசித்து வந்தாலும், இந்தியாவின் பல மாநிலங்களுக்கு நானே சென்று தலைமுடியினை தானமாக பெற்று வருகிறேன். இந்தப் பயணத்தில் இதுவரையில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருந்து தலைமுடியை சேகரித்துள்ளேன். தமிழ்நாட்டில் சென்னை, சேலம், கோயம்புத்தூர் போன்ற இடங்களுக்கு சென்று தானமாக தலைமுடியினை பெற்றுள்ளேன். சிலர் தங்களின் முடியில் பாதியையும் ஒரு சிலர் தலைமுடி முழுவதையும் தானமாக கொடுத்துள்ளனர். அந்த முடிகளின் அளவு நீளம் மற்றும் நிறத்திற்கு ஏற்ப விக்கினை தயார் செய்வோம்.

ஒரு விக் செய்ய குறைந்தது 12 இன்ச் நீளமுள்ள தலைமுடி தேவைப்படும். அதற்கேற்பதான் தலைமுடியினை சேகரிப்போம். இவை இயற்கையான தலைமுடி என்றாலும் அதனை விக்காக மாற்றும் முன் பல செயல்முறைக்கு உட்படுத்த வேண்டும். முதலில் தலைமுடியை நன்கு தண்ணீரில் சுத்தம் செய்வோம். அதன் பிறகு ஒவ்வொன்றாக பிரித்து சிக்கினை நீக்குவோம். ஒருவருக்கு விக் அமைக்க குறைந்தபட்சம் 200 கிராம் அளவுள்ள முடி தேவைப்படும். அதன் பிறகு அதனை ஒன்றாக இணைத்து தைப்போம். விக் தேவைப்படுபவரின் தலையின் சுற்றளவிற்கு ஏற்பதான் விக் தயாரிப்போம்” என்றவர், இதனால் அவர்கள் அடையும் பலன்களையும் நம்முடன் பகிர்ந்தார்.

“விக்கினை இயற்கையான முடி கொண்டு கைகளால் செய்யப்படுவதால், பயனாளிகளுக்கு எரிச்சல், அரிப்பு போன்ற எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இவர்கள் புற்றுநோய்கான சிகிச்சை எடுத்து வருவதால், அதனால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மன வலியை பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் தலைமுடி முற்றிலும் கொட்டி விடும் என்பதால், அவர்கள் ‘உயிர் எவ்வளவு நாள் இருக்கும் என்று தெரியாது, இருக்கும் வரையாவது தலைமுடியோட இருக்கிறோம்’ என்ற மனநிலையில் இருப்பார்கள். இந்த சமயத்தில் எங்களின் விக் அவர் களின் மன அழுத்தம் நீக்க ெபரும் உதவியாக இருக்கிறது. தலைமுடியில்லாமல் தங்களை கண்ணாடியில் பார்ப்பதற்கும், விக் வைத்த பிறகு அவர்களை பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசத்தை உணர்கிறார்கள், அந்த மாற்றத்தினை நேசிக்கிறார்கள்’’ என்றவர், தலைமுடி தானம் செய்யும் முறை குறித்து விவரித்தார்.

“பெண்களின் அழகை மேம்படுத்துவதில் தலைமுடிக்கு மிகப்பெரிய பங்குள்ளது. இவர்களுக்காக அதனை துறக்க முன்வரும் பெண்களுக்கு என் அமைப்பு சார்பாக நான் தலை வணங்குகிறேன். எக்காரணமாக இருந்தாலும் பெண்கள் தங்களின் தலைமுடியினை இழக்க விரும்பமாட்டார்கள். ஆனால் பாதிக்கப் பட்டவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தானம் செய்ய முன்வருகிறார்கள். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெண்கள் எங்கள் அமைப்பின் மூலம் தலைமுடியினை தானம் செய்திருக்கிறார்கள்.

எங்களின் சேவையை கேள்விப்பட்ட மற்ற அமைப்பினரும் எங்களுடன் இணைந்து செயல்பட துவங்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து வரும் தலை முடியினை நாங்க விக்காக மாற்றி அவர்களுக்கு கொடுக்கிறோம். அதில் ஒன்று பால்ட் பியூட்டி இந்தியா (Bald Beauty India). மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு விக் தேவை என்றாலும், முடியினை தானம் செய்ய விரும்புபவர்களும் hyderabadhairdonation99 என்ற எங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்” என்ற கோரிக்கையை முன்வைத்தார் ஷிவா.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

The post ஒரு புன்னகைக்காக தலைமுடியை தானம் செய்யும் பெண்கள்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED குளிர் காலத்தில் தலையில் எண்ணெய் தடவுங்கள்!