×

பாலின பேதங்கள் ஒரு பார்வை பாகுபாடுகளை நீரூற்றி வளர்த்துக்கொண்டிருக்கிறோம்!

நன்றி குங்குமம் தோழி

ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்று தொண்டை வறள கத்திக்கொண்டிருக்கிறோம். அதிலிருந்து வெளிவர எத்தனை பெண்கள் மனதார விரும்புகிறார்கள், அப்படியே விரும்பினாலும் அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்களா? ஆதிக்கம் செலுத்துபவர்கள் மேல் குற்றம் சாட்டிக்கொண்டே காலம் தள்ளிவிடலாமே தவிர அதிலிருந்து வெளிவருவதற்கான எந்தவித முயற்சியும் எடுக்காத வரை மாற்றம் மட்டும் வரவேண்டும் என நினைப்பது அறிவார்ந்த செயலாக இருக்குமா?

ஆண்கள் பல்லாண்டு காலமாக, வழிவழியாக பெண்களை இரண்டாம்தார பிரஜையாகத்தான் உபயோகித்து வருகிறார்கள். ஏனெனில் அதில் அவர்களுக்கான செளகரியங்கள் உள்ளன. செளகரியத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தானாக முன்வந்து அதை விட்டுக்கொடுப்பார்கள் என அமர்ந்திருந்தால் அது எப்படி சாத்தியமாகும்? மிகவும் நியாய உணர்வுடன் சிந்திக்கும் வெகு சில மனிதர்கள் (இவர்களை முற்போக்குவாதிகள் என்ற அடைமொழியில் அடைப்பது கூட தவறுதான். சக மனிதர்களை, தனக்கு சமமாக மதிப்பதற்கு முற்போக்கு என்ன பிற்போக்கு என்ன? ஆணாக பிறந்தது ஒன்றும் ஒருவர் கடினமாக உழைத்து சம்பாதித்த பதவியல்ல. சந்தர்ப்பவசத்தினால் ஆணாகப் பிறந்தவரே. இந்த உண்மையை ஏற்க ஏன் ஒருவர் முற்போக்கு சிந்தனை உள்ளவராக இருக்க வேண்டும்? சிந்திக்க தெரிந்தாலே போதுமே!) இதற்கு விதிவிலக்காக இருக்கலாமே ஒழிய, பெருவாரியானவர்கள் அவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் செளகரியங்களை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கத் தயார் இல்லாதவர்களாகவே இருப்பார்கள்.

ஆக இங்கு யார் போராட வேண்டும்? என் சுதந்திரத்தை பறிக்க உனக்கு நான் உரிமை அளிக்கவில்லை என்பதை எடுத்துரைக்க யார் முயல வேண்டும்? பாதிக்கப்பட்டவர்கள் தானே? அப்படியிருக்க, பல்லாண்டுகளாக பெண்ணாக பிறந்துவிட்டாலே இப்படித்தான், பெண்ணாக பிறப்பதே பாவம், பெண்ணாக பிறந்துவிட்டேனே வேறென்ன செய்வது என்று புலம்பிக்கொண்டே காலம் கழிப்பதை என்று நிறுத்திவிட்டு, என் முடிவுகளை நானே எடுத்துக்கொள்ளும் அறிவுடன்தான் நானும் பிறந்திருக்கிறேன். உனக்கிருக்கும் அத்தனை உரிமைகளும் எனக்கும் உள்ளது என்று தெள்ளத்தெளிவாக ஆணித்தரமாக முடிவெடுக்கும் பெண்தான் தன் வாழ்வில் சந்திக்கும் ஆண்களையும் சிந்திக்க வைப்பாள்.

தன் பாட்டனார், தந்தை அனைவரும் ஆதிக்கம் செலுத்துவதையும், அடிமைப்பட்டுக்கிடந்த பாட்டிமார்களையும், தாயையும் பார்த்து வளர்ந்த ஆணுக்கு இப்படிப்பட்ட வாழ்வுமுறை சரியில்லை என எடுத்துச் சொல்லியும், தான் அதற்கு உடன்பட மாட்டேன் என சொல்ல வேண்டியதும் யார்? மாற்றங்களை விரும்பும், அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண் தானே? எந்தப் பிரச்னைக்கும் புலம்பித்தவிப்பதில் ஒரு பலனும் இல்லை.

பிரச்னைகளுக்கான தீர்வை நோக்கி ஒரு அடியாவது எடுத்து வைத்தாலே அந்தப் பிரச்னையை ஒழிக்க இயலும். பெண்கள் இங்கு அச்சப்படுகிறார்கள், எல்லாவற்றிற்கும் அச்சம். உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்ல அச்சம். நான் உன் கருத்துகளுடன் உடன்படவில்லை என்று சொல்வதற்கு அச்சம். அந்த அச்சம் நம்முள் காலம்காலமாக திணிக்கப்பட்டிருக்கிறது. பெண் என்பவளின் இலக்கணத்தில் அச்சம் என்பது ஒரு முக்கியமான இடம் வகிக்கிறது. எடுத்த எடுப்பில் சண்டை போட வேண்டாம், உறவை அறுத்துக்கொண்டு வெளிவர வேண்டாம். ஆனால் சாதாரணமாகச் சொல்லிப் பார்ப்பதில் புரியவைப்பதற்குகூட ஏன் இந்த அச்சம்?

ஒருவேளை ஒரு பெண்ணிற்கும் தனிக்கருத்துகள் இருக்கும், விருப்பு வெறுப்புகள் இருக்கும் எனக்கூட சிந்திக்காத ஒரு சூழலில் வளர்ந்திருக்கலாம். ஆண் என்றால் இப்படித்தான், பெண் என்றால் இப்படித்தான் என்ற இலக்கணம் பிறழாமல் வாழ்ந்த குடும்பத்திலிருந்து வந்திருக்கலாம். ஒரு வேளை நாம் மனம் திறந்து பேசினால், ஒரு புரிதல் ஏற்பட ஏதுவாக இருக்கலாம். அப்படியும் புரிதல் ஏற்படவில்லையெனில் அடுத்த முயற்சிக்கு போகலாம். ஆனால் இந்த சாதாரண பேச்சுவார்த்தையைத் தொடங்கக்கூட தயங்கித் தயங்கியே காலம் கடத்தும் பெண்கள் நிறைந்த சமூகம் இது. இன்னும் சில பெண்கள் இருக்கிறார்கள். நன்றாக படித்து ஒரு வேலையிலும் இருப்பார்கள். ஆனாலும் அடிமைப்பட்டே கிடப்பார்கள்.

திருமணத்தை முறித்துக்கொண்டு வெளியில் வரத்தான் விரும்புகிறேன். ஆனால் என் பெற்றோர்கள் அப்படி ஒரு முடிவெடுத்தால் எங்கள் வீட்டிற்கு வந்துவிடாதே என்று சொல்லிவிட்டார்கள், நான் எங்கு செல்வது என்பார்கள்! பெண் என்றாலே யாராவது தனக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் தான் வாழமுடியும் என்ற மூளைச் சலவைகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.

பெற்றோர்களும் முன்பின் தெரியாத, அறிமுகமில்லாத ஒரு மனிதனுக்கு தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு, என்ன நடந்தாலும் பொறுத்துக்கொண்டுதான் மகள் போக வேண்டும் என நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. திரும்பி வரும் மகளும், ஒருவேளை அவளுக்கு அதற்குள் பிள்ளைகள் பிறந்திருந்தால் அவர்களும் இவர்களுக்கு சுமையாகிப் போவார்கள். வயதான காலத்தில் இந்தச் சுமையை சுமக்க அவர்களால் இயலாது என்பதும் ஒரு காரணம். இப்படி தங்கள் மகள் திரும்ப வந்துவிட்டால் அந்த நாலு பேர் என்ன சொல்வார்கள் என்ற பயமும் இதில் உண்டு.

ஆக பெண்களுக்கு ஒன்று புரியவேண்டும், ஒரு புறம் இணையரை குறை சொல்லிக்கொண்டும் இன்னொரு புறம் பெற்றவர்களை குறை சொல்லிக்கொண்டும் வாழும் வாழ்வில் எதை சாதித்து
விடப்போகிறார்கள்? தன் மகிழ்வும், நிம்மதியும் தொலைத்து, பிள்ளைகளுக்கும் இதே மாதிரி சிந்தனையை வளர்த்து.. இப்படிப்பட்ட வாழ்வுமுறை சரியா?

ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்வின் பொறுப்பை தான் சுமக்க முன்னுக்கு வரவேண்டும். சுதந்திரம் என்பது தனியாக வருவதில்லை, பொறுப்புணர்வுடன் கைகோர்த்து வருவது என்ற தெளிவு வேண்டும். படிப்பிருக்கிறது, உழைப்பதற்கு வலுவிருக்கிறது, ஏன் என்னால் தனித்திருந்து என் வாழ்வை சீராக கொண்டு செல்ல முடியாது என்ற தன்னம்பிக்கை வேண்டும். எந்த மாற்றமும் தானாக வராது. என்றோ சில பெண்கள் தங்களுக்கும் கல்வி வேண்டும் என்று நினைத்த சிந்தனையாலும், அதை நோக்கிய முயற்சியுமே இன்று பெண்கள் கல்வி கற்க ஏதுவான சூழல் உருவாகியிருக்கிறது. எப்பொழுதும் மற்றவர் போட்டுச் செல்லும் பாதையிலேயே கண்களை கட்டிக் கொண்டு போய்க்கொண்டிருந்தால், நாம் விரும்பும் மாற்றம் எங்கிருந்து வரும்? நாம் நமக்கான பாதையை முன்னெடுக்க இங்கு யாரின் அனுமதியும் தேவையில்லை என்பதில் தெளிவு வேண்டும்.

பெண்களை இரண்டாம் பிரஜையாக நினைக்கும் நினைப்பு ஆண்களுக்குள் மட்டும் விதைக்கப் படவில்லை. பெண்கள் மனதிலும் ஆழமாக விதைக்கப்பட்டிருக்கிறது. இப்படியான தன் நிலையை உடைத்து வெளியில் வந்து எனக்கான முடிவுகளை நான்தான் எடுப்பேன் என்ற உறுதிகொள்ள வேண்டும். அது பெற்றோராக இருந்தாலும் சரி, இணையராக இருந்தாலும் சரி, எந்தவொரு உறவாக இருந்தாலும், தன் வாழ்க்கைக்கான முடிவை எடுக்க இங்கு யாருக்கும் உரிமையில்லை என்பதை தானும் புரிந்து கொண்டு மற்றவருக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

ஆணாதிக்கம் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பதால், பெண்ணாதிக்கம் இல்லையெனவும், ஆண்கள் அனைவரும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றோ பெண்கள் அனைவரும் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்றோ பொருள் கொள்ளலாகாது. எங்கு யார் ஆதிக்க மனப்பான்மையுடன் நம்மை அடிமைப்படுத்த நினைத்தாலும், அதற்கு எதிரான போராட்டம் அடிமைப்பட்டுக் கிடப்பவர்களிடமிருந்துதான் துவங்க வேண்டும். கேட்டுப் பெறுவதல்ல சுதந்திரம், எடுத்துக்கொள்வது. எடுப்பதை தடுக்கும் சக்திகளுடன் போராடித்தான் தீர வேண்டும். இது நாம் நமக்கு செய்துகொள்ளும் நன்மை மட்டுமல்ல. பின்வரும் சந்ததியினருக்கு நாம் செய்ய வேண்டிய, விட்டுப்போக வேண்டிய பொறுப்பு.

ஆணோ பெண்ணோ, யாராக இருந்தாலும் அடுத்த சந்ததியினருக்கு ஒரு நல்ல உதாரணமாக, எங்கும் தங்கள் சுயத்தை இழக்காத, அச்சத்தை விளைக்காத ஒரு வாழ்வை வாழ்ந்துகாட்ட வேண்டியது நம் கடமை என்றே கொள்ள வேண்டும். நம் பிள்ளைகள் நம்மைப்போல் ஒடுங்கிக்கிடக்க வேண்டும் என்ற எண்ணத்தை நாம்தான் அப்படி வாழ்ந்து அவர்களிடம் ஏற்படுத்துகிறோம். என்று பெண்கள் இந்த சமூகம் தனக்கென வகுத்திருக்கும் இலக்கணங்களுக்குள் தன்னை ஒடுக்கிக்கொள்ளாமல், வீட்டில் இருக்கும் நால்வராக இருந்தாலும், வெளியில் இருக்கும் நம் கண்களுக்கு புலப்படாத நால்வராக இருந்தாலும், அவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் தங்கள் வாழ்வை தான் கையிலெடுத்து வாழத் தொடங்குகிறார்களோ அன்று தானாக வேறு வழியின்றி அனைவரும், ஆண்கள் உள்பட ஏற்றுக்கொள்ளத் தயாராகிவிடுவார்கள். மற்றவர் முதுகில் சவாரி செய்தால், அவர்கள் வழியில்தான் நாமும் பயணிக்க வேண்டும்.

தொகுப்பு: லதா

(தொடர்ந்து சிந்திப்போம்!)

 

The post பாலின பேதங்கள் ஒரு பார்வை பாகுபாடுகளை நீரூற்றி வளர்த்துக்கொண்டிருக்கிறோம்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED குளிர் காலத்தில் தலையில் எண்ணெய் தடவுங்கள்!