×

மனித உறுப்பில் பெரியது தோல்!

நன்றி குங்குமம் தோழி

உலகம் உண்டான நாள் முதல் மனித சமுதாயத்தின் பலவித நிற பேதங்களுக்கும், பெரும் போர்களுக்கும் காரணமாக அமைந்த மேலழகையும், அதற்குண்டான நிறங்களையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது தோல் என்பதால், மனித உடலை மூடியுள்ள தோல் குறித்து விளக்க ஆரம்பித்தார் சித்த மருத்துவரான ஒய்.ஆர்.மானக்சா.வான மண்ட லத்தை போர்த்தியிருக்கும் ஓசோன் போன்று, தோலானது உடலைப் போர்வை போல் போர்த்தியுள்ளது. ஆதாமையும், ஏவாளையும் படைத்த பிறகே, அவர்களுக்குத் தோலை ஆடையாக கடவுள் அணிவித்ததாக பைபிள் கூறுகிறது. மனித உறுப்புகளிலேயே மிகவும் பெரியது தோல்தான். தோல்தான் உடலின் மென்மையான கவசம்.

அழகியல் துறைக்கும் தோல் இன்றியமையாதது. தோல் பற்றிய படிப்பு ‘டெர்மடாலஜி’ என்றும், தோல் மருத்துவர்கள் ‘டெர்மடாலஜிஸ்ட்’ எனவும் அழைக்கப்படுகின்றனர். 1572ல் ஜெரோனிமோமெர் குரியாலி என்ற இத்தாலிய மருத்துவர் எழுதிய நூலே உலகில் தோல் நோய்களைப் பற்றி எழுதப்பட்ட முதல் மருத்துவ நூல்.ஒவ்வொன்றின் உருவாக்கத்திற்கும் பின்னால் ஏதோ ஒரு காரண காரியம் இருப்பதுபோல, மனிதன் உருவான விதமும் அதிசயமே! கண், காதுகளின் அமைப்பு, கைவிரல்கள், பல் தாடைகள் போன்ற மனிதனின் ஒவ்வொரு உறுப்புகளின் அமைப்பும் மிக நேர்த்தியாக, மனிதனின் தேவைகளை நிறைவேற்ற தகுந்தபடி கனகச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உறுப்புகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அதற்கு உடலெனும் வடிவம் பெற தோல் என்கிற ஆடையினை மிக நேர்த்தியாய் நெய்து, மனித உருவத்திற்கான அமைப்பையும், அழகையும் பெற தோலில் வடிவம் பெறப்பட்டு உலா வருபவர்களே மனிதர்களாகிய நாம். உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் தோல் முதலிடம் வகிப்பதுடன், வெளி உலகச் சுற்றுப்புறத்திற்கும், உள்ளுறுப்புகளுக்கும் எல்லைக் கோடாகவும் விளங்குகிறது.

மனிதனுடைய கண் இமைதான் உடலின் மிக மெல்லிய தோலைக் கொண்டது. குதிகாலில் இருப்பதுதான் தடிமனான தோல். மனித வாழ்நாளில் சுமார் ஆயிரம் முறை தோல் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தோலின் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 1 கோடியே 90 லட்சம் செல்கள் இருக்கின்றன. நிமிடத்துக்கு 40 ஆயிரம் செல்கள் இதில் உதிர்கின்றன. இவ்வாறு உதிரும் செல்களின் எடை ஆண்டொன்றுக்கு சராசரியாக 4 கிலோ வரை இருக்கும். அந்த வேகத்துக்கு இணையாக புது செல்களும் தோலில் உருவாகிக் கொண்டேதான் இருக்கும்.

கிருமிகளின் தாக்குதலில் இருந்து நம் உடலைப் பாதுகாக்க முன்னணியில் நிற்கும் போர் வீரர்களில் முக்கியமானது தோல்தான். உடலில் நச்சுப் பொருட்கள் புகாமல், சூரிய ஒளியின் கெடுதலான கதிர்வீச்சுகள் நம்மை தாக்காமல், தோல்தான் கவசமாக போர்வையாக நமது உடலைப் பாதுகாக்கிறது, தடுக்கிறது. மனிதனின் புற அழகுக்கும் காரணமாக இருக்கிறது. தோலின் முக்கியப் பணிகள், பாதுகாத்தல், உடலின் வெப்ப நிலையைச் சீராக வைத்தல், உணர்வுகளை உணர்த்துதல், சுரத்தல் போன்றவை.

தோலின் மேற்புறத்தில் கோடிக்கணக்கான கிருமிகள் உள்ளன. மேல் அடுக்கு உரியும் போது, அதோடு சேர்ந்து கிருமிகளும் இணைந்தே நீக்கப்படுகின்றது. மூன்று அடுக்குகளால் ஆன நமது சருமத்தை மூடியிருக்கும் தோல் உரோமங்கள் கொண்ட தோல், உரோமங்கள் அற்ற தோல் என இரு வகையாகப் பார்க்கப்படுகிறது. நமது பாதம் மற்றும் உள்ளங்கால்களில் இருப்பது உரோமங்கள் அற்ற தோல். மற்ற இடங்களில் இருப்பவை உரோமங்கள் கொண்ட தோல்.

மனித சருமம் சுமார் 2 சதுர மீட்டர் பரப்பளவினை ஆக்கிரமிக்க வல்லது. இதன் எடை சராசரியாக 4 கிலோ இருக்கும். நமது தோலின் தடிப்பு (Thickness) சராசரி 2 மி.மீ. சில இடங்களில்
(உள்ளங்கை, உள்ளங்கால்களில்) அதிகமாக இருக்கும். ஒரு சராசரி மனித உடலில் 10% எடை சருமத்தின் எடையாகும். சராசரியாக 27 நாட்களுக்கு ஒருமுறை வெளித்தோல் புதிதாக மாறிக் கொண்டிருக்கும்.

இந்நிகழ்வானது நாம் உணரமுடியாமலே நடந்து வருகிறது. குறிப்பாக தீப்புண்களால் சருமம் தீய்ந்து போனால் அந்த இடத்தில் தோலைப் பொருத்த காயம் பட்டவரின் உடலிலிருந்தே தோலை எடுத்தும் ஒட்டலாம்.தோலை மூன்று பாகங்களாகப் பிரித்து…

* மேல் தோல் அல்லது வெளித்தோல்

* கீழ் தோல் அல்லது அடித்தோல்

* கொழுப்புப் பகுதி என்று பார்க்கப்படுகிறது.

மேல் தோல்

மேல் தோல் கீழ் தோலோடு நெருக்கமாய் ஒட்டியுள்ளது. மேல் தோலின் அடிப்பாகம் அலை அலையாக வளைந்தும், கீழ் தோலுடன் விழுதுகள் போல் நுழைந்தும் காணப்படும். கீழ் தோலின் ஊடுருவலில் மேல் தோலின் அடிப்பாகம் பள்ளம் பள்ளமாகக் காணப்படும். மேல் தோலில் ரத்தக்குழாய்களும் நரம்புகளும் இருக்காது. எனவே மேல் தோலை கீறினால் அந்த இடத்தில் ரத்தக்கசிவும், வலியும் நமக்கு ஏற்படாது.

கீழ் தோல்

கீழ் தோல் கெட்டியான நார்களாலும், மூன்று விதமான செல்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கொலாஜன் நார்கள் இரும்புக் கம்பிகளைப் போலவும், சிமென்டு கலவை போன்றும் கலந்து காணப்படும்.

கொழுப்புப் பகுதி

இப்பகுதியே உடலுக்கு உருவத்தை அளிக்கும் பகுதி. இடத்திற்கு ஏற்ப இதன் திறன் வெளிப்படுகிறது. அதாவது, கன்னங்களில் அதிகக் கொழுப்பையும், கண்ணிமைகளில் குறைந்த கொழுப்பையும் உற்பத்தி செய்து உருவத்தை அழகுபடுத்தும் வேலையை இது சிறப்பாகச் செய்கின்றது. கொழுப்புப் பகுதி, உடலின் வெப்பத்தைப் பாதுகாப்பதுடன், உள்ளுறுப்புகளை வெளி அதிர்ச்சிகளிலிருந்து காப்பாற்றும் வேலையைச் செய்து, சக்தியை சேமித்து வைத்துத் தேவைப்படும் போது வழங்கும் முக்கியமான பணிகளைச் செய்கிறது.

தோல் ஆரோக்கியத்திற்கான உணவுகள்…

விட்டமின் ‘ஏ’ மற்றும் பீட்டா கரோட்டின் குறைபாடு இருந்தால் தோல் உலர்ந்து, வட்ட வடிவிலோ, செதில் வடிவிலோ கோடுகள் தெரியும் படி வறட்சியோடு காணப்படும். ஆகவே தோல் ஆரோக்கியமாக இருக்க கேரட், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பசலைக்கீரை, பால் ஏடு, முலாம் பழம், முட்டை, மத்தி மீன், சால மீன், பப்பாளி, பிரக்கோலி, மாம்பழம், பச்சைப் பட்டாணி, முருங்கைக் கீரை, ஆரஞ்சு போன்ற உணவு வகைகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் தோல் வறட்சி நீங்கி, பளபளப்பாய் காட்சி தரும்.

தோல் இளமையுடனும் சுருக்கம் இல்லாமலும் இருக்க கொலாஜன் சத்து முக்கியமானது. தோலுக்கு உறுதி, வலிமையை அளிக்கும் ‘கொலாஜன்’ புரத உருவாக்கத்தில் ‘விட்டமின் சி’ சத்து முக்கிய பங்காற்றுகிறது. நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யாப்பழம், நார்த்தங்காய், கொத்தமல்லி கீரை போன்ற உணவுகளில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. முட்டை, மீன், பால், பீன்ஸ், பட்டாணி, சோயாபீன், பருப்பு வகைகளில் கொலாஜன் புரதம் அதிகம் உள்ளது.

முதுமைத் தன்மையை குறைத்து, இளமையாய் காட்டும் ஆன்டி ஏஜிங் உயிர்ச்சத்துக்கள் பாதாம், வேர்க்கடலை, கடுகுக் கீரை, பிரக்கோலி, சிவப்பு குடை மிளகாய், பிஸ்தா, சிறுகீரை, வெந்தயக்கீரை, அவகோடா, ஆலிவ், சூரியகாந்தி விதைகள், சோயாபீன், மீன், முட்டை போன்ற உணவுகளில் வைட்டமின் E சத்துகளாக நிறைந்துள்ளது.

முகப்பரு மற்றும் தோல் புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை செலினியம் சத்திற்கு உண்டு. அனைத்து வகை கைக்குத்தல் அரிசி, காளான்கள், கடல் சிப்பி, பூண்டு, பருப்பு, வாழைப் பழங்கள், பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவற்றில் செலினியம் சத்து நிறைந்துள்ளது. தோல் பராமரிப்பதற்கு சத்தான உணவுகள் மட்டும் அல்லாது, ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். காலை அல்லது மாலை வேளையில் சிறு நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகள் செய்வதும் அவசியம்.

குறைந்தபட்சம் ஆறு முதல் ஏழு மணி நேரம் தூக்கமும் அவசியம். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. கால்சியம் எலும்பில் சேர்வதற்கு ‘விட்டமின் டி’ மிக முக்கியம். இதனை சூரிய வெளிச்சத்தில் இருந்தே தோல் கிரகித்துக்கொள்கிறது. தோலின்றி உயிர் வாழ்வது இயலாத காரியம். அதனால்தான்,“அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு” – எனத் திருக்குறளிலும் தோல் உவமைபடுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மும்பை, பூனா ஆகிய இடங்களில் தோல் வங்கிகள் செயல்படுகின்றன. தோல் தானம் செய்ய விருப்பம் இருப்பவர்களின் தோல், அவர்களது இறப்பிற்குப்பின் சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தி தேவைப்படுவோருக்கு பயன்படுத்தப்படுகிறது. செயற்கைத்தோல் உருவாக்கத்திற்கான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தோல் ஆரோக்கியத்திற்கான நலங்குமாவு

பாசிப்பயறு, வெட்டி வேர், சந்தனத் தூள், கோரைக்கிழங்கு, கார்போக அரிசி, விலாமிச்சு வேர், கிச்சிலிக் கிழங்கு இவற்றை சம அளவில் எடுத்து பொடித்து சோப்பிற்கு பதிலாக தேய்த்து குளித்து வந்தால் தோல் வறட்சி, சொறி, சிரங்கு நீங்கி, தோல் பளபளப்புடனும், ஆரோக்கியத்தோடும், வாசனையோடும் இருக்கும்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post மனித உறுப்பில் பெரியது தோல்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ?ஒருவருக்குச் செல்வம் சேரச்சேர...