×

விவாகரத்து நல்லதா… கெட்டதா?

 

நன்றி குங்குமம் தோழி

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு விஷயம் டிரெண்டாகி வரும். இந்த வருடம் சோஷியல் மீடியா முழுக்க டிரெண்டில் பேசப்படுவது பிரபலங்களின் விவாகரத்தாகத்தான் உள்ளது. அவர்கள் அது குறித்து அறிவித்ததும் அவரவர் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் பிரபலங்களை ரோல் மாடலாக பார்க்கும் இன்றைய இளம் தலைமுறையினர் இவர்களின் வாழ்க்கையையே ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு தங்களின் வாழ்க்கையையும் தவறாக அமைத்துக் கொள்கிறார்கள்.

விவாகரத்துக்கான காரணம் என்ன? அதனை ஏன் நடைமுறைப்படுத்த வேண்டும்? விவாகரத்து அவசியம் தானா? இளம் தலைமுறையினரின் மனநிலை என்ன..? போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளித்தது மட்டுமில்லாமல் வாழ்க்கையின் யதார்த்தம் குறித்தும் விளக்கம் அளித்தார் உளவியல் மற்றும் உறவு நிபுணரான டாக்டர் அபிலாஷா.‘‘விவாகரத்து பிரபலங்கள் மத்தியில் மட்டுமில்லை பொதுமக்களிடமும் தற்போது அதிகமாகி வருகிறது. பிரபலங்கள் விவாகரத்து குறித்து அறிவிக்கும் போது அதற்கான காரணமும் தெரியபடுத்தப்படுகிறது. மேலும் பிரபலங்கள் மத்தியில் மட்டும்தான் விவாகரத்து நடைபெறுகிறது என்றும் சொல்லிவிட முடியாது.

சாதாரண மக்களும் விவாகரத்து செய்கிறார்கள். ஆனால் அது வெளிப்படையாக தெரிவதில்லை. இவர்கள் பிரபலங்கள் என்பதால் வெட்ட வெளிச்சமாக பேசப்படுகிறது. அதுதான் பிரபலங்கள் மற்றும் மற்றவர்கள் விவாகரத்தினை எதிர்கொள்வதற்கான வித்தியாசம்.பிரபலங்கள் விவாகரத்து அறிவிக்கும் போது… அவர்களுக்கு என்ன குறைச்சல், பணம், புகழ் எல்லாம் இருக்கிறது. வெளிநாட்டிற்கு சுற்றுலா, விதவிதமான உடைகள், நட்சத்திர ஓட்டலில் உணவு, விலைஉயர்ந்த நகை மற்றும் கார்… இது எல்லாம் இருந்தும் ஏன் இந்த முடிவினை எடுக்க வேண்டும் என்ற அந்தக் கேள்விதான் பலரின் மனதில் ஏற்படுகிறது. பிரபலங்கள் என்றால் அவர்கள் வேற்றுக் கிரக மனிதர்கள் அல்ல.

அவர்களும் சாதாரண மனிதர்கள்தான். விவாகரத்து என்ற முடிவினை அவர்கள் திருமணமான ஒரே நாளில் எடுப்பதில்லை. பல காலம் அவர்கள் எதிர்பார்த்த அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல் போகும் போது இனி இந்த உறவினை கட்டிக் காக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பிறகு தான் அவர்களின் கடைசி பானமாக இதை பயன்படுத்துகிறார்கள். ஒரு புகழ்பெற்ற பிரபலம் என்றால் அவர் எப்போதும் வேலை காரணமாக பிசியாகவே இருப்பார்.

அவரின் வேலை மற்றும் அதில் இருக்கும் டென்ஷன் அனைத்தும் அவரின் துணை அறிவார். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு. மனைவியோ அல்லது கணவனோ தங்களின் இணையிடம் எதிர்பார்ப்பது ஆடம்பரமான வாழ்க்கை கிடையாது. ஒவ்வொரு மனிதனும் வேண்டுகின்ற அடிப்படையான விஷயம்தான். தினமும் இல்லை என்றாலும் வாரத்தில் இரண்டு நாட்கள் இருவரும் சேர்ந்து நேரம் செலவிட வேண்டும். உடல்நிலை சரியில்லாத நேரத்தில் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் போன்ற விஷயங்களைதான் கேட்கிறார்கள். அவை கிடைக்காத போது விரக்தி ஏற்படும். ஒரு கட்டத்திற்கு மேல் அதுவே வெறுப்பாக மாறி இருவருக்கும் இடையே பெரிய விரிசலை உண்டாக்கும்.

விளைவு தனியாக நிம்மதியுடன் வாழ்ந்திடலாம் என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். இந்தப் பிரிவினை ஆரம்பிக்கும் காலக்கட்டத்திலேயே இருவரும் பேசி ஒருவரின் எதிர்பார்ப்பு என்ன என்று புரியவைத்து அதற்கேற்ப அவர்களின் வாழ்க்கை முறையினை மாற்றினால், அந்த உறவு நீடிக்க வாய்ப்புள்ளது. காலதாமதமானால் எப்போதுமே சரி செய்ய முடியாமல் போய்விடும்.
பிரபலங்களே இருந்தாலும் விவாகரத்து என்பது மிகவும் கடினமான பயணம்தான். ஒருவரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய நிகழ்வு.

விவாகரத்துக்குப் பிறகு ஜாலியாக இருக்கலாம் என்று பலர் சொல்லலாம். ஆனால் சில காலம் ஒருவருடன் அந்நியோன்யமாக வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு, அவர்களை பிரிய நேரிடும் அந்த தருணம் என்னதான் இருவருக்கும் பிரச்னை இருந்தாலும், அது பெரிய மனவலியை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உடல், மனம் என ஒருவரின் சப்த நாடிகளையும் பாதிக்கக்கூடிய கடினமான பயணம்தான் விவாகரத்து.

பிரபலங்கள் என்பதால் அவர்கள் பற்றிய செய்தி வெளிவரும் போது, மக்கள் சமூகவலைத்தளங்களில் அவர்களைப் பற்றி தேவையில்லாத கருத்துக்களை முன் வைக்கிறார்கள். அவர்களும் மனிதர்கள் தான். மற்றவர்கள் சந்திக்கும் அதே வலியை தான் அவர்களும் எதிர்கொள்வார்கள். அவர்களின் மனதினை புண்படுத்தாமல் அமைதியாக இருந்தாலே அதில் இருந்து அவர்களே மீண்டு விடுவார்கள். வெளியே சிரித்த முகத்துடன் வலம் வரும் இவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. அதில் கருத்து சொல்லவோ அவர்களைப் பற்றி அவதூறாக பேசவோ யாருக்கும் உரிமை இல்லை’’ என்றவர், வாழ்க்கை பற்றி இன்றைய இளம் தலைமுறையினரின் புரிதல் குறித்து விவரித்தார்.

‘‘முன்பு திருமண வாழ்க்கையில் எந்த பிரச்னை வந்தாலும் குழந்தை மற்றும் பெற்றோருக்காக பிரச்னைகளை பொறுமையாக கையாண்டார்கள். ஆனால் இன்று ஏன் பொறுமையா இருக்க வேண்டும் என்ற கேள்வியினை முன்வைக்கிறார்கள் இன்றைய தலைமுறையினர். பெற்றோர் அவர்களின் கடமைக்காக திருமணம் செய்கிறார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒருவரால் மற்றொருவர் கஷ்டங்களை சந்திக்கும் போது, அதை ஏன் நான் வாழ்நாள் முழுக்க எதிர்கொள்ள வேண்டும் என்கிறார்கள், குறிப்பாக பெண்கள்.

அதற்கு முக்கிய காரணம் அவர்களும் சம்பாதிக்கிறார்கள். தன் வாழ்க்கையை அவர்களால் பார்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கிடைக்கிறது. திருமண வாழ்க்கையை தைரியமாக விலகிட முடிவு செய்கிறார்கள். ஒரு கல்யாணம் விவாகரத்தில் முடிகிறது என்றால் அதில் பல விஷயம் அடங்கி இருக்கும். சில மனக்கசப்பினால் கணவன்-மனைவி இடையே பேச்சுவார்த்தை இருக்காது. ஈகோ பிரச்னை இருக்கும். மூன்றாம் நபரின் தலையீடல் இருக்கலாம். இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்காது. எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இருவருக்கும் இடையே அந்நியோன்யம் குறைந்திருக்கும். தற்போது மிகவும் முக்கியமான காரணம் செல்போன் அடிக்‌ஷன் என்று சொல்லப்படுகிறது.

விவாகரத்து நல்லதா கெட்டதான்னு பார்த்தா… சில நேரங்களில் நல்லது என்று ேதான்றும். அதாவது, ஒருவர் சாடிஸ்ட், சைக்கோபாத், உடல் நோய் அல்லது மனநோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். விளைவு வன்கொடுமை. அதில் இருந்து காப்பாற்றிக் கொள்ள விவாகரத்தை நாடுகிறார்கள். ஆனால் இன்று ஒரு சின்ன பிரச்னை ஏற்பட்டால், அதை எவ்வாறு சமாளிக்கலாம் என்று சிந்திக்காமல் உடனே விவாகரத்து என்கிறார்கள். குடும்பம் என்பது நம்முடைய மிகப்பெரிய சொத்து. விவாகரத்து என்ற வலியை எதிர்கொள்ள விரும்பாத இன்றைய தலைமுறையினர் கல்யாணமே வேண்டாம் என்கிறார்கள். யாருக்காகவும் தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தினை விட்டுக்கொடுக்க அவர்கள் விரும்புவதில்லை. நான் சம்பாதிக்கிறேன். நான் ஏன் மற்றவரை சார்ந்து இருக்க வேண்டும். எனக்கான வாழ்க்கையினை எனக்குப் பிடித்த மாதிரி வாழ்ந்து கொள்கிறேன் என்கிறார்கள்.

இந்த மனநிலைக்கு முக்கிய காரணம் இன்று பலருக்கு குடும்பத்தின் மதிப்பு தெரிவதில்லை. கூட்டுக் குடும்பமா இருக்கும் போது, எந்தப் பிரச்னை வந்தாலும் சேர்ந்து தீர்த்தார்கள். கூட்டுக் குடும்பம் உடைந்து தனிக்குடித்தனம் நடத்தினாலும், விசேஷ நாட்களில் ஒன்றாக கூடி மகிழ்ந்தார்கள். இன்று உறவுகள் தேவையில்லை… தனித்து இருக்க விரும்புகிறார்கள். படிப்பு, வேலை என்று குடும்பத்தை பிரிந்து இருக்கிறார்கள். குடும்பத்தின் மதிப்பினை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. வீட்டில் பெற்ேறார் அன்பாகவும் பாசமாகவும் இருப்பதைப் பார்த்து வளரும் குழந்தைக்கும் அதே போல் வாழ்க்கை வேண்டும் என்று விரும்புவார்கள். வரும் காலத்தில் குடும்பத்திற்கு என தனிப்பட்ட நேரம் ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது அவசியம்.

கல்யாணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நிகழ்வு. கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டு இருந்தாலே எந்தப் பிரச்னையும் ஏற்படாது. மேலும் இருவரும் வேலைக்கு செல்வதால் வீட்டு வேலையில் கணவன், மனைவிக்கு துணையாக இருக்கும் ேபாது அங்கு அன்பு மேலும் பலப்படும். அதைத்தான் பெண்களும் எதிர்பார்க்கிறார்கள்.
குடும்பம் என்றால் சண்டை இருக்கும். ஈகோவினை தவிர்த்து ஒருவருக்கு ஒருவர் பேசி தீர்த்துக் கொண்டாலே மலை போல் இருக்கும் பிரச்னையும் பனி போல் விலகிடும். முடியாத
பட்சத்தில் நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம்’’ என்று அறிவுரை கூறினார் உளவியல் நிபுணர் டாக்டர் அபிலாஷா.

தொகுப்பு: ப்ரியா

 

The post விவாகரத்து நல்லதா… கெட்டதா? appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED குளிர் காலத்தில் தலையில் எண்ணெய் தடவுங்கள்!