காரைக்காலில் 34 வருடங்களாக நவராத்திரி கொலு பொம்மை தர்பார்

 

காரைக்கால், அக்.10: காரைக்கால் தருமபுரம் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி தனது வீட்டில் நவராத்திரியை முன்னிட்டு 30 வருடங்களாக கொலு பொம்மைகள் வைத்து அசத்தி வருகிறார்.
காரைக்கால் மாவட்டம் தருமபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன்.இவரது மனைவி தர்மாம்பாள். இல்லத்தரசியான இவர் தனது வீட்டில் நவராத்திரி திருவிழா முன்னிட்டு நவராத்திரி கொலு தர்பார் வைத்துள்ளார். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடவுள் உருவ சிலைகளை வைத்துள்ள இவர் தனது கொலு தர்பாரில் சிவன், பார்வதி, பெருமாள், தாயார், வராகி அம்மன் சிலை உள்ளிட்ட பல்வேறு சிலைகளை கொலு தர்பாரில் இடம்பெறச் செய்துள்ளார்.

மேலும் கொலு தர்பாரில் சிறப்பு வாய்ந்ததாக கைலாயத்தில் சிவன் பார்வதிக்கு திருமணம் மேளதாளங்கள் முழங்க நடைபெறும் வைபவம், ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம், பள்ளி கொண்ட சேவை கருட சேவை, சீர்காழியில் மாசி மாதத்தில் நடைபெறும் 18 பெருமாள் வைபவம் ஆகியவை பார்வையாளர்களை கவர்ந்தது. மேலும் மதுரையில் வெகு விமர்சையாக நடைபெறும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா குறித்தும் தத்ரூபமாக கொலு வடிவில் வைக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து தர்மாம்பாள் கூறுகையில், ஒவ்வொரு நவராத்திரி திருவிழாவின்போதும் முதல் நாளிலிருந்து கொலு தர்பார் நடத்தப்படுவது வழக்கம். எனது பாட்டி, எனது மாமியார், தற்போது நான் என மூன்று தலைமுறைகளாக இந்த கொலு தர்பார் நடைபெற்று வருகிறது. நான் கடந்த 34 ஆண்டுகளாக தொடர்ந்து நவராத்திரி திருவிழாவை கொண்டாடும் வகையில் தமிழ் பாரம்பரிய முறைப்படி பழமை மாறாமல் கொலு பொம்மைகளை வைத்து வருகிறேன்.

இதில் பழங்கால கோயில்கள், நாட்டுப்புற கலைகளான கரகாட்டம் மயிலாட்டம் உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும் வகையிலும், தமிழர் மரபுகளை பிரதிபலிக்கும் வகையிலும் மாறாத கலை நயத்துடன் நடத்தப்பட்டு வருகிறது எனக் கூறினார். இவரது வீட்டில் நடைபெறும் கொலு தர்பாரில் நாள்தோறும் அப்போது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து பஜனை பாடல்கள் பாடியும், கொலு தர்பார் நிகழ்ச்சியை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

 

The post காரைக்காலில் 34 வருடங்களாக நவராத்திரி கொலு பொம்மை தர்பார் appeared first on Dinakaran.

Related Stories: