மனதிற்கினியான்

பகுதி 2

“நீங்கள் எல்லோரும் என்னுடைய குழந்தைகள். இன்று நான் மிகவும் நெகிழ்வுடன் இருக்கிறேன். இந்த உரையாடல் மூலமாக உங்களுக்கு என் அன்பைத் தெரியப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். தொடங்குங்கள்.’’ ஒரு சிஷ்யன் எழுந்தான். ‘‘என்னுடைய நண்பனின் தாய் அரண்மனையில் மருத்துவப் பெண்ணாக வேலை பார்க்கிறார். அவர் நேற்று என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியை விவரிக்க நினைக்கிறேன்.’’ தசரத மகாராஜாவின் குழந்தைகள் பிறந்து மூன்றாம் நாள் இரவு, திடீரென்று நான்கு குழந்தைகளும் ஒரே சமயத்தில் அழத் தொடங்கிவிட்டன. தாய்ப்பாலுக்காக அழுகின்றனவா? ஏதாவது பூச்சி கடித்து விட்டதால் அழுகின்றனவா? அல்லது ஏதாவது நோயா? என்ற குழப்பம் அங்கே நிலவியது.

வேலை பார்க்கின்ற பணிப் பெண்கள், தாதியர்கள், மருத்துவப் பெண்கள் என எல்லோரும் வெகு நேரம் ஆராய்ந்து கொண்டே இருந்திருக்கிறார்கள். அவர்களால் குழந்தைகளின் அழுகையை நிறுத்த முடியவில்லை. காரணமும் புரியவில்லை. மொத்த அரண் மனையும் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. விவரம் அறிந்து தசரத மகாராஜாவும் அந்த இடத்திற்கு வந்து விட்டார். ஒவ்வொருவரையும் விசாரித்தார்.

யாருக்கும் காரணம் பிடிபடவில்லை. குழந்தைகளும் அழுகையை நிறுத்திய பாடு இல்லை. உடனே, மகாராஜா அங்கு உள்ள சிப்பந்தியை அழைத்து, “நம் குலகுரு வசிஷ்டரை அழைத்து வா’’ என்றார். குல குருவாகிய வசிஷ்டர் அங்கு வர, குழந்தை களின் அழுகையை கேட்டபடி கண்மூடி பிரார்த்தனையில் ஈடுபட்டீர்கள். சில நொடிப்பொழுதில் ஒரு தீர்மானத்திற்கு வந்தீர்கள்.குழந்தைகளின் தொட்டில்களை இடம் மாற்றச் சொன்னீர்கள். ராமனின் தொட்டிலுக்கு அருகில் இலக்குவனின் தொட்டிலை வைக்கச் செய்தீர்கள். பரதனின் தொட்டிலுக்கு அருகில் சத்ருக்னனின் தொட்டிலை வைக்கச் சொன்னீர்கள். அப்பொழுதும் குழந்தைகளின் அழுகை பாதி அளவுதான் குறைந்திருந்தது.

ஆகையால், குழந்தை ராமனையும், இலக்குவனையும் ஒரே தொட்டிலில் இருக்க வைத்தார்கள். மற்றொரு தொட்டிலில், பரதனையும் சத்ருக்னனையும் சேர்ந்து இருக்க வைத்தார்கள். குழந்தைகள் முற்றிலுமாக அழுகையை நிறுத்திவிட்டது. இது ஒரு மகா ஆச்சரியமான செயல். என் நண்பனின் தாய் மட்டுமல்ல, அங்கிருந்த அனைவரும் இந்த நிமிடம் வரையிலும் எப்பேர்ப்பட்ட குலகுரு நமக்குக் கிடைத்திருக்கிறார் என்று போற்றுகிறார்கள்.”

“குருவே என்னுடைய கேள்வி அதிக பிரசிங்கத்தனமாக இருந்தால் என்னை மன்னிக்க வேண்டும். எதனால் உங்களுக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றி, செயல்படுத்தினீர்கள்? இப்படிச் செய்வது எங்களைப் போன்ற சாதாரணமானவர்களுக்குச் சாத்தியமா?’’ அங்கு குடியிருந்த மாணாக்கர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்வை தெரிவித்தார்கள். குருவைத் தலைகுனிந்து வணங்கினார்கள்.

“இந்தச் செய்தி உன் வரையில் எட்டிவிட்டதா? இருக்கட்டும். இதற்கு என் ஒரே பதில். ஆழ்நிலைத் தியானம், இறைவனை மனதார வேண்டிக்கொள்ள நம் மனதில் இறைவன் தோன்றி இதுபோலச் செய் என்று ஒரு கட்டளையை இடுவார். நான் ஒரு கருவி மட்டுமே. நான் சாதாரண மனிதனே! என்னை இறைவன் ஒரு பணியின் நிமித்தம் இதைச் செய்வித்திருக்கிறான்.”“இந்த உணர்வு இருந்தால், தியானப் பயிற்சி இருந்தால் இது எல்லோருக்கும் வசப்படக் கூடியதுதான். இந்தச் செய்தியை இத்துடன் விட்டுவிடுவோம். அடுத்த  கேள்விக்கு நாம் செல்லலாம்.’’

“குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும்?’’
“இறைவனையும் மனிதனையும் இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும்.”“ஒரு நல்ல சீடன் எப்படி இருக்க வேண்டும்?”“குருவை இறைவனுக்கும் மேலாக நினைக்க வேண்டும். குருதான் சிஷ்யனைத் தேர்வு செய்கிறார். அத்தகுதிக்குத் தகுந்தவனாக குரு அவனை மாற்றிவிடுவார். அவரிடம் நம்பிக்கையோடு எப்பொழுதும் இருப்பது ஒன்றுதான், சீடனின் பிரதான விஷயமாக இருக்க வேண்டும். நேரமாகிறது ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம்.”

“நீங்கள் தசரதரின் முதல் குழந்தை ராமனின் பாதங்களைத் தொட்டு உங்கள் கண் களில் ஒற்றிக்கொண்டீர்கள். அப்பொழுது நீங்கள் மிகவும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டீர்கள். அதன் காரணம் என்ன என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?” வசிஷ்டர் மெல்லச் சிரித்தார். “இதை உங்களுக்கு நேரிடையாக சொல்வதைவிட ஒன்று மட்டும்கூற ஆசைப்படுகிறேன். நீங்கள், நான் இப்பொழுது இந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே, இது நாம் எல்லோரும் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம். நம் பூமியில் மட்டும்தான் இறைவன் மனிதனாக அவதரிப்பதும், மனிதன் இறைவனாக நடந்துகொள்வதும் நேர்கிறது. இதை எப்பொழுதும் உங்கள் நினைவில் கொண்டிருங்கள். உங்கள் எண்ணங்களை நேராக, நேர்மறையாக வைத்துக் கொள்ளுங்கள்.

அப்போது உங்கள் வார்த்தைகள் நேர்மறையாக இருக்கும். அதனால் உங்கள் செயல்களும் நேர்மறையாக இருக்கும். நேர்மறையாக இருக்கின்ற ஒரு சூழலில் கண்டிப்பாக தெய்வம் வாசம் செய்யும். சூரியதாசனும் சந்திரசூடனும் குருவை நமஸ்கரித்தார்கள். ஆசிரமத்தில் இருந்து எதுவும் பேசாமல் மௌனமாக நடந்து சரயு நதிக்கரையின் ஓரம் வந்து சேர்ந்தார்கள். இந்த சரயுநதி சூரியகுல வழித் தோன்றல்களை எப்படி எல்லாம் ஆசீர்வதித்திருக்கிறது. இப்போது சூரியகுலத்தில் புதிதாய் இணைந்திருக்கும் நான்கு குமாரர்களையும் கண்டிப்பாக ஆசீர்வதிக்கும் என்று நினைத்தபடி பிரார்த்தித்தார்கள்.

கோதண்டராமன்

The post மனதிற்கினியான் appeared first on Dinakaran.

Related Stories: