எம்கேபி நகர் பகுதியில் கஞ்சா சோதனையில் ரூ.8.5 லட்சம் சிக்கியது

பெரம்பூர்: கஞ்சா சோதனையின்போது போலீசாரிடம் சிக்கிய ரூ.8.5 லட்சம், விசாரணைக்கு பிறகு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை எம்கேபி நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அம்பேத்கர் கல்லூரி சாலையில் புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாரின் தலைமையில், தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மதியம் கஞ்சா விற்பனை தொடர்பாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த ஒருவர், ஏற்கனவே அங்கு தயாராக நின்று கொண்டிருந்தவரிடம் கருப்பு கலர் கவர் ஒன்றை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார் அவர்களைப் பிடித்து அதில் கஞ்சா இருக்குமோ என சோதனை செய்தபோது, அதில் ரூ.8.5 லட்சம் இருந்தது.

இதனையடுத்து போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் பணத்தை கொடுத்தவர் வியாசர்பாடி எம்கேபி நகர், 13வது குறுக்கு தெருவை சேர்ந்த ரவி (எ) சுரேஷ்குமார் (36) என்பதும், அதனை வாங்கியவர் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா பகுதியை சேர்ந்த யாசோபுத்திரன் (25) என்பதும் தெரிய வந்தது. ரவி என்பவர் வியாசர்பாடியில் 2 இடங்களில் காயலான் கடை நடத்தி வந்துள்ளார். இவர் செங்குன்றம் பகுதியில் இரும்புக்கடை நடத்தி வரும் செல்வன் என்பவரிடம் சமீபத்தில் 2 லோடு இரும்பு எடுத்துள்ளார். அதற்குரிய பணத்தை யாசோபுத்திரன் மூலமாக கொடுத்து அனுப்பியது தெரிந்தது. பின்னர் உரிய ஆவணங்களை இருவரும் காவல் நிலையத்தில் சமர்ப்பித்துவிட்டு பணத்தை பெற்றுச் சென்றனர்.

 

The post எம்கேபி நகர் பகுதியில் கஞ்சா சோதனையில் ரூ.8.5 லட்சம் சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: