திருப்பதி அலிபிரி முதல் திருமலை வரை -பகுதி 3

கடந்த வார இதழில், திருமலையில் ஒலிக்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்களை பற்றியும், வெங்கடாஜலபதிக்கு தினமும் நடைபெறும் முதல் சேவையான சுப்ரபாத சேவையில் எம்.எஸ்., சொன்ன “சுப்ரபாதத்தை’’ பற்றி எடுத்துரைத்தோம். மேலும் நம் பயணத்தை தொடங்குவோம்.

வயதானவர்களுக்கு சில டிப்ஸ்

40 வயதிற்கு மேற்பட்டவர்கள், கீழ் திருப்பதி அதாவது, அலிபிரியில் ஒரு `ஹெல்த் செக்கப்’ செய்துக் கொள்வது நல்லது. இதற்காக, பிரத்தேகமாக மருத்துவமனை கூடாரங்கள் அமைக்கப்பட்டு, பரிசோதிக்கின்றார்கள். பிபி, பல்ஸ் செக்கப் போன்ற அடிப்படை செக்கப்புகளை செய்த பிறகு, மலை ஏறுவது நல்லது.50 வயதை கடந்தவர்கள் அனைவரும், தங்கள் ஊரினிலேயே பிபி, சுகர், பல்ஸ், இசிஜி போன்ற செக்கப் செய்து கொண்டு, மருத்துவரின் ஆலோசனைகளின் படி, படியேறுவது சிறந்தது.

அதேபோல், இதய நோயாளிகள், மூட்டு பிரச்னை இருப்பவர்கள், கட்டாயமாக மருத்துவர் ஆலோசனைகளின் படியே, திருமலை ஏறவேண்டும். இவைகளை தவறவிட்டவர்கள், நிச்சயம் இங்குள்ள திருமலை நடைப் பயண மருத்துவமனையில் ஆலோசனை பெற்ற பின்பே மலையேறவேண்டும். இவைகளையெல்லாம் படித்தவுடன் “நாம் செல்வது திருமலைக்குத்தானே? ஏழுமலையான் காப்பாற்ற மாட்டானா? என்னய்யா ஆய்டப்போகுது.. எல்லாம் அவன் பார்த்துக்குவான்’’. என்று சிலர் குதர்க்கமாக யோசிப்பதுண்டு. அது முற்றிலும் தவறு.“ஆண்டவன் இருக்கிறான்.

நம்மை காப்பாற்றுவான்’’ என்று நாம் நடுரோட்டினிலா நிற்கின்றோம்? அல்லது நடுரோட்டில் வேகமாக காரில் பயணிப்போமா? இல்லையே… அப்படி சென்றால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு நன்கு தெரியும். ஆண்டவனை வேண்டிக் கொண்டு “அப்பா.. ஏழுமலையானே, உன் சந்நதிக்கு வருகிறேன். நான் விபத்தில் சிக்கிக் கொள்ளாது, உன்னை தரிசித்து திரும்பவேண்டும். அப்பனே… அனுக்கிரகம் செய்’’ என்று வேண்டிக் கொண்டு, மிதமான வேகத்தில், சாலை விதிகளை பின்பற்றி சென்றால்… மலையப்பன் துணை இருப்பான். அதுதானே நியாயம். அந்த தாத்பர்யம்தான் வயதானவர்களுக்கும் பொருந்தும்.

ஆகையால், வயதானவர்கள் மருத்துவர்களின் வழிகாட்டுதலின் மூலமாகவே திருமலைக்கு நடைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். வயதானவர்கள், தாங்கள் எடுத்துக் கொள்ளும் அன்றாட மாத்திரைகளை ஒரு பையில் வைத்துக் கொண்டு நடைப் பயணம் மேற்கொள்ளலாம். அது அவசர காலத்தில் உதவும். அதே போல் வயதானவர்கள், படிகளை ஏறுவதற்கு வசதியாக, படிகளின் நடுவில் சில்வர் கம்பிகளை அமைத்துள்ளனர். அதனை பிடித்துக் கொண்டு, படிகளை ஏறலாம். அப்படி ஏறுவதுதான் மிக சிறந்த பாதுகாப்பாகும்.

திருமலைக்கு, போக்குவரத்து மூலமாக செல்ல இருவழிச் சாலைகள் உள்ளன. ஒன்று திருமலைக்கு ஏறிசெல்ல, மற்றொன்று கீழே இறங்கி வர. நாம் நடைப் பயணத்தை மேற்கொள்ளும்போது, கார், பஸ் போன்ற வாகனங்கள் ஒவ்வொன்றாக, அழகாக வளைந்துவளைந்து பிரேக் பிடித்தபடி சென்று கொண்டிருந்தன. அதனை சற்று நேரம் வேடிக்கை பார்த்த பின்னர் மீண்டும் நம் பயணம்
தொடர்ந்தது.

இனி படிகளை எளிமையாக ஏறிவிடலாம்

தற்போது காலை 8.00 மணி. மூன்றரை மணி நேரம், திருமலைக்கு செல்ல, ஏழுமலையானை தரிசிக்க பயணித்துள்ளோம். இன்னும் 6 கி.மீ தூரத்தில் திருமலையை அடைந்துவிடலாம். காளி கோபுரத்தை கடந்த பின், படிகள் எல்லாமே மிக சுலபமாக இருக்கிறது. சிறிது தூரம் ஸ்லோப் போன்ற படிகளும், சிறிது தூரம் ஆங்காங்கே படிகளும் இருக்கின்றன. ஆகையால், காளி கோபுரத்திற்கு பின் படிகளை ஏறுவது சற்று சுலபமாக இருக்கும். பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, மான், கரடி போன்ற மிருகங்கள் தாக்காமல் இருக்க, வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும், கீழே இருந்து அதாவது அலிபிரியில் இருந்து இத்தகைய பாதுகாப்பு வசதிகளை அமைக்கவில்லை என்பது அச்சமே! நடைபாதையில், தொடர்ந்து சிறுத்தைகளின் அச்சுறுத்தல் இருப்பதை பத்திரிகை வாயிலாக நாம் நன்கு அறிவோம். இவை, நிர்வாகத்திற்கும் தெரியுமல்லவா? இருப்பிலும், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே வேலிகளை அமைத்திருக்கிறது, தேவஸ்தானம் போர்டு.

ஸ்ரீ பேடி ஆஞ்சநேயர் கோயில்

2500 படிகளுக்கு மேல் கடந்து வந்ததும், சுமார் 20 அடி உயரம் கொண்ட “ஸ்ரீ பேடி ஆஞ்சநேயர்’’ கோயில் உள்ளது. வெள்ளை நிறத்தில் ஆஜானுபாகுவாக இருக்கும் பேடி ஆஞ்சநேயரை தரிசித்த பின்னரே, மீதம் உள்ள படிகளை கடக்கிறார்கள். பேடி ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும் என்றால், நடைபாதை வழியாக பயணம் மேற்கொண்டால் மட்டுமே தரிசனம் செய்யமுடியும். ஆனால், நாம் முன்பே கூறியதை போல், போக்கு வரத்து மூலமாக திருமலை செல்வதற்கு இருவழிகள் இருக்கிறதல்லவா.. அதில், கீழே இறங்கும் பாதையில் பேடி ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். ஆனால், படிகளை ஏறி ஸ்ரீ நிவாஸா… கோவிந்தா…. என்று நாமஸ்மரணை செய்து, பேடி ஆஞ்சநேயரை தரிசிப்பது கூடுதல் பலன்தானே!2500 படிகளை கடந்து வந்த அசதியில், ஒரு அரைமணி நேரம் இங்கேயே பேடி ஆஞ்சநேயரை பார்த்து, மெய்மறந்து ரசித்தவாறு ஓய்வெடுத்த பின், மீண்டும் நம் பயணம் தொடங்கியது.

வனவிலங்குகள் நிறைந்த திருமலை

பேடி ஆஞ்சநேயரை கடந்ததும், அழகான மான்களின் கூட்டத்தை பார்க்க முடிகிறது. குட்டி மான்கள் முதல் பெரியபெரிய மான்கள் வரை அலைந்து திருக்கின்றன. அதே போல், மலைகள் என்றாலே குரங்குகள் இயல்பாகவே சுற்றித்திரியும். திருமலையில் சொல்லவா வேண்டும்! குரங்குகளின் செல்ல சேட்டைகளை நம்மால் பார்க்க முடிந்தது. மேலும், பல வண்ணங்களைக் கொண்ட வண்ணத்துப் பூச்சிகளையும் ரசிக்க முடிந்தது. ஆக, இப்படி பல விலங்குகளையும், பூச்சிகளையும் ரசித்தவாறே.. அதுகளுக்கு தொல்லைகள் கொடுக்காமல், நாம் நடைப் பயணத்தை மேற்கொள்ளலாம்.நான் ரசித்த ஒரு காட்சியினை விவரிக்கின்றேன். பேடி ஆஞ்சநேயரை கடந்து சுமார் ஒரு 100 படிகள்தான் இருந்திருக்கும். சில்லென்று காற்று. வானம் முழுவதிலும் மேகமூட்டங்கள். மரங்களுக்கு இடையே, மான்களின் கூட்டம், எதனையோ
உண்டு கொண்டிருக்கின்றது. இதற்கு இடையில், மரக்கிளைகளில் அமர்ந்து கொண்டு `க்குகூ… க்குகூ…’’ என்ற குயில் மற்றும் பறவைகளின் இனிமையான ஓசைகள். குரங்குகள், அங்குமிங்கும் ஓடியும், ஒரு மரத்தைவிட்டு இன்னொரு மரத்திற்கு தாவியும் சேட்டைகள் செய்து கொண்டிருந்தன. இவைகளை எல்லாம் ரசித்தபடியும், காதுகளில் மெல்லியதாய் ஒலித்துக் கொண்டிருக்கும் மந்திரங்களை தியானித்தும், “இறைவா.. ஏழுமலையப்பா… எத்தகைய அழகானதப்பா உன்னுடைய படைப்பு!  ஆச்சரியம்! அற்புதம்! என்னதோர் இனிமையான படைப்புகள்! இந்த படைப்புகளோடு மனிதனையும் படைத்து, அதனை ரசிக்கும்படி செய்தாயே..! ஆண்டவா.. ஏழுமலையானே..! நன்றியப்பா.’’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே அடுத்த படியின் மீது கால் வைத்து நடைப் பயணத்தை தொடர்ந்தோம்.

தோரசனி மண்டபம்

கோவிந்த நாமத்தை சொல்லிக் கொண்டே, 2760 படிகளை கடந்து வந்தோமேயானால், “தோரசனி மண்டபம்’’ என்னும் இடத்திற்கு வந்துவிடலாம். இங்கிருந்து மிக சரியாக 5.40 கி.மீ., தூரம் பயணித்தால், திருமலையை அடைந்துவிடலாம். தோரசனி மண்டபத்தை அடுத்து பயணத்தை மேற்கொள்ளும் சமயத்தில், பக்தர்களுக்கு சற்று பாதுகாப்பு குறைப் பாடுகள் இருக்கின்றது. நடைபாதைக்கு தடுப்பு வேலிகள் இல்லாது காணப்படுகின்றன. தோரசனி மண்டபம் கடந்த பிறகு பக்தர்கள் சற்று எச்சரிக்கைகளுடனே செல்லவேண்டும். எந்த விலங்கினங்களும் பக்தர்களை தாக்கக்கூடும். குழந்தைகளை அழைத்து செல்லும்போது கவனம் தேவை. அலிபிரியில் இருந்து தோரசனி மண்டபம் வரை தடுப்பு வேலிகள் காணப்படுகின்றன.
அதன் பிறகு, ஏனோ காணப்படவில்லை. காரணம் தெரியவில்லை. தோரசனி மண்டபத்திற்கு பின்னரும் வேலிகளை தேவஸ்தானம் போர்ட் அமைத்தால், பக்தர்களின் பாதுகாப்பு உறுதியாகும். ஆனால், எல்லாத்துக்கும் மேலாக, மலையப்பஸ்வாமி வசிக்கும் இடம், திருமலை. நாம் அவனை காண பக்தியுடன், சிரத்தையுடன் நடைப் பயணத்தை மேற்கொள்ளும்போது, அவன் நம்மை கைவிட்டுவிடுவானா என்ன? நிச்சயம் விடமாட்டான். நம்மை காப்பதற்காகவே குன்றின்மேல் நின்று அருளிவருகின்றான்.

கொத்த மண்டபம்

இப்போது, காலை 9.00 மணி. தற்போது “கொத்த மண்டபம்’’ என்னும் இடத்திற்கு வந்திருக்கின்றோம். இந்த இடத்திற்கு வர 2830 படிகளை நடந்தேறி வந்திருக்கிறோம். இங்கிருந்து 4கி.மீ., பயணித்தால், திருமலையை அடைந்துவிடலாம். இந்த கொத்த மண்டபம் பகுதிகளில் அதிகளவில் மோர் விற்கப்படுகின்றன. சில்லென்று கிடைக்கின்றது. நல்ல காட்டமாக, மிளகாய் போட்டு, ரூபாய் 5க்கு விற்கப்படுகிறது. மோர் அருந்தலாம்.
இப்பகுதிகளில் அதிகளவில் மான்கள் காணப்படுகின்றன. `Deer wild Animal. Its Not Pet Animal’’ என்றெல்லாம் தேவஸ்தானம் சார்பில் எச்சரிக்கை பதாகைகளை ஆங்காங்கே வைத்திருந்தாலும், சில பக்தர்கள் அதை கவனித்தும் அல்லது கவனிக்காது மான்களுக்கு உணவுகளை வழங்கியும், செல்ஃபி எடுப்பதற்காக அதனை தொந்தரவு செய்வதும்
வாடிக்கையாகி வருகிறது. மேலும், விலங்குகள் அருகில் நாம் செல்வது ஆபத்தும்கூட. இதனை படிக்கும் போது, நீங்கள் திருமலை செல்ல வாய்ப்புகள் கிடைத்தால், அதுவும் நடந்து செல்ல வாய்ப்புகள் கிடைத்தால், இதனை நினைவில் கொள்ளுங்கள். எந்த ஒரு ஜீவராசிகளையும் துன்புறுத்தல் கூடாது. குறைந்தது திருமலை போன்ற கோயில்களுக்கு செல்லும் போதாவது துன்புறுத்தாமல் இருப்பது நல்லது. இதுவே, ஆன்மிகத்தின் முதல் படி. பிறகுதான் ஏழுமலையானை காண அடுத்த படிகள் எல்லாம்…!கொத்த மண்டபத்தில் இருந்து சுமார் 4.கி.மீ., பயணித்தால், திருமலைக்கு சென்று விடலாம். தொடர்ந்து பயணிப்போம்…

முக்குபாவி மண்டபம்

கொத்த மண்டபத்தல் இருந்து, 10 படிகளை மட்டுமே ஏறி வந்தவுடன், “முக்குபாவி மண்டபம்’’ என்னும் இன்னொரு மண்டபத்தை அடைந்துவிடலாம். இங்கு, ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை பார்த்தேன். என்னெவென்றால், சில பக்தர்கள் செருப்புகளை அணிந்தவாறே திருமலையை ஏறி வருகிறார்கள். அப்படி நடைப் பயணத்தை மேற்கொள்ளக் கூடாது அதற்கு ஒரு அருமையான
கதைக் கூட உண்டு.
(பயணம் தொடரும்…)

ரா.ரெங்கராஜன்

 

The post திருப்பதி அலிபிரி முதல் திருமலை வரை -பகுதி 3 appeared first on Dinakaran.

Related Stories: