திருப்பதி-திருமலையில் கோலாகலம் ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடக்கம்: இரவு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல் வாகன சேவையாக இன்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 12ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் 9 நாட்கள் நடைபெறும். இதனை முன்னிட்டு நேற்று இரவு விஸ்வ சேனாதிபதி நான்கு மாடவீதியில் ஊர்வலமாக வந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து புற்று மண் சேகரித்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புற்று மண்ணில் நவதானிய விதைகளை பயிரிட்டு 9 நாட்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடும் அங்குரார்பணம் பூஜைகள் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் நடைபெற்றது. இன்று மாலை 3 மணியளவில் கருட உருவம் பொறித்த பிரம்மோற்சவ கொடி விஸ்வசேனாதிபதி, சக்கரத்தாழ்வார், தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஆகியோருடன் மாடவீதியில் வீதியுலா வருகிறது. பின்னர் கோயில் தங்க கொடிமரத்தில் மாலை 5.45 மணி முதல் 6 மணிக்குள் மீன லக்னத்தில் வேதமந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு பட்டு வஸ்திரங்களை ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்க உள்ளார்.

இதையடுத்து பிரம்மோற்சவத்தின் முதல் வாகன சேவையாக பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். பிரம்மோற்சவத்தின் 9நாட்களிலும் உற்சவ மூர்த்திகள் 16 வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். இதனையொட்டி கோயிலில் நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகளும், சிறப்பு முன்னுரிமை தரிசனங்களும், விஐபி தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் லட்டு பிரசாதம் கிடைக்க 7 லட்சம் லட்டுகள் இருப்பில் இருக்கும் விதமாக தயார் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக 11 கவுன்டர்கள் அமைத்து மொத்தம் 65 கவுன்டர்கள் மூலம் லட்டு பிரசாதம் விற்பனை செய்ய உள்ளது. 1,250 தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் 3,009 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 2,700 சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளது. பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த திருமலையில் 24 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தரிசனத்திற்கு செல்லும் வரிசைகள், வைகுண்டம் காத்திருப்பு அறைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் தொடர்ந்து அன்ன பிரசாதம், குடிநீர், பால் வழங்கப்படும். அஸ்வினி மருத்துவமனை, சுவிம்ஸ், பர்ட் மருத்துவமனைகளில் இருந்து 45 டாக்டர்கள், 60 மருத்துவ உதவியாளர்கள் மூலம் 6 மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. 16 இடங்களில் முதலுதவி மருத்துவ மையம் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். ரூ.3.56 கோடி காணிக்கை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரேநாளில் 63,376 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 25,146 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.3.56 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இந்நிலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று மாலை தொடங்க உள்ள நிலையில் இன்று காலை முதல் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 12 அறைகள் நிரம்பியுள்ளன. ரூ.300 தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரமும், இலவச தரிசன பக்தர்கள் 12 மணி நேரமும் காத்திருந்து தரிசித்து வருகின்றனர்.

 

The post திருப்பதி-திருமலையில் கோலாகலம் ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடக்கம்: இரவு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி appeared first on Dinakaran.

Related Stories: