ஹீரோயின்களை போதைக்கு அடிமையாக்கி உள்ளார் நடிகர் நாக சைதன்யா, சமந்தா விவாகரத்துக்கு முன்னாள் முதல்வரின் மகன் தான் காரணம்: தெலங்கானா அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

திருமலை: தெலங்கானா மாநில அறநிலையத்துறை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா ஒருங்கிணைந்த மேடக் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ளார். இந்நிலையில் சில நாட்கள் முன்பு துப்பாகாவில் நடந்த கல்யாண லட்சுமி மற்றும் ஷாதி முபாரக் திருமண நிதி உதவி திட்டத்தில் பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் கொண்டா சுரேகா பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு வந்த அவரை மேடக் பாஜ எம்பி ரகுநந்தன் ராவ் மாலையிட்டு வரவேற்றார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டது.

இதனால் அமைச்சர் கொண்டா சுரேகா கண்டனம் தெரிவித்த நிலையில் சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக பிஆர்எஸ் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்றார். இந்நிலையில் நேற்று ஐதராபாத் காந்தி பவனில் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் கொண்டா சுரேகா கண்ணீர் விட்டார். சமூக வலைதளத்தில் தன் மீது பரப்பும் அவதூறு பிரச்சாரத்திற்கு தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகனும் பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் தான் காரணம். எம்.பி. ரகுநந்தன் ராவும் என்னை போனில் அழைத்து சமூக ஊடகங்களில் நடக்கும் ட்ரோலிங் குறித்து மன்னிப்பு கேட்டார்.

கே.டி.ராமாராவ் கடந்த 10 ஆண்டு ஆட்சியின்போது பல ஹீரோயின்களின் வாழ்க்கையில் விளையாடி உள்ளார். ஹீரோயின்களை போதைக்கு அடிமையாக்கியது இவர்தான். சினிமா துறையில் இருந்து சிலர் விலகி இருப்பதற்கும் அவர்தான் காரணம். நடிகர் நாக சைதன்யா- நடிகை சமந்தா விவாகரத்து செய்ததற்கும் கே.டி.ராமாராவ் தான் காரணம். பல நடிகர், நடிகைகளின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டு அவர்களை மிரட்டி வந்துள்ளார். பெண்களை அவர் கேவலமாக பார்க்கிறார். நேற்று அமைச்சர் சீதக்கா மீதும் இப்போது தன் மீதும் சமூக வலைதளத்தில் துபாயில் இருந்தபடி கே.டி.ராமாராவுக்காக ட்ரோல் செய்யப்படுகிறது.

அவர் தவறு செய்யாவிட்டால் ஒரு பெண் அமைச்சரை ட்ரோல் செய்தால் கண்டிக்கும் கலாச்சாரம் கே.டி.ராமாராவுக்கு இல்லையா? என்னை ட்ரோல் செய்வது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஹரிஷ் ராவ் கண்டித்துள்ளார். ஆனால் ஏன் கே.டி.ராமாராவ் பேசவில்லை? இவ்வாறு அவர் கூறினார். இதற்கு முன்னாள் அமைச்சர் பி.ஆர்.எஸ் கட்சி செயல் தலைவர் கே.டி.ஆர். கூறுகையில், ‘ ஹரோயின்களின் போன்களை ஒட்டுக்கேட்டதாக கொண்டா சுரேகா பொய்யாக குற்றம் சாட்டுகிறார். சுரேகா மீதான சமூக வலைதளப் பதிவுகளுக்கும், எமது கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’’ என்றார். தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவின் இந்த கருத்துக்கு தெலுங்கு திரையுலகினரும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

The post ஹீரோயின்களை போதைக்கு அடிமையாக்கி உள்ளார் நடிகர் நாக சைதன்யா, சமந்தா விவாகரத்துக்கு முன்னாள் முதல்வரின் மகன் தான் காரணம்: தெலங்கானா அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: