திட்ட மதிப்பீடு தயாரிக்க வல்லுநர் குழு சேலம் உருக்காலை விரிவாக்கம் செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் குமாரசாமி உறுதி

சேலம்: சேலம் உருக்காலை விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக எவ்வளவு நிதி தேவை என்பது தொடர்பாக திட்ட மதிப்பீடு தயாரிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என சேலத்தில் ஒன்றிய அமைச்சர் குமாரசாமி கூறினார். சேலம் உருக்காலையை நேற்று காலை, ஒன்றிய கனரக தொழில்கள் மற்றும் எக்குத்துறை அமைச்சர் குமாரசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிர்வாக இயக்குநர் வி.கே.பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு விளக்கம் அளித்தனர். பின்னர் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:
சேலம் உருக்காலை கடந்த 15 ஆண்டுகளாக ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து இயக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ஆலை நல்ல நிலையில் இயங்குகிறது. இந்த ஆலை விரிவாக்கம் செய்யப்படும். இதற்கு எவ்வளவு நிதி தேவை, எத்தகைய வகையில் விரிவாக்கப்பணி மேற்கொள்வது என்பது பற்றி ஆராய்ந்து திட்டமதிப்பீடு தயாரித்து அளிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும். அந்த குழுவின் அறிக்கையை பெற்ற பின், இன்னும் 2 மாதத்தில் மீண்டும் சேலம் உருக்காலைக்கு வருவோம். தென்மாநிலங்களில் விசாகப்பட்டினம், பெங்களூரு, சேலம் ஆகிய 3 இடங்களில் உள்ள செயில் ஆலைகளையும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக டெல்லியில் விரைவில் ஆய்வுக்கூட்டம் நடத்தவுள்ளோம். சேலம் உருக்காலையில் தற்போது துருப்பிடிக்காத ஷீட் உற்பத்தி செய்யப்படும் நிலையில், விரிவாக்கம் மேற்கொள்ளப்படும் போது, துருப்பிடிக்காத குழாய்கள் உற்பத்தி செய்ய வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

‘காவிரி விவகாரம் தீர்வுக்கு கிவ் அன்ட் டேக் பாலிசி’
அமைச்சர் குமாரசாமி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று தரிசனம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், காவிரி விவகாரத்தில் மழை பொழிவு குறைவாக இருக்கும்போது தான் பிரச்னை ஏற்படுகிறது. நல்ல மழைப்பொழிவு இருக்க வருண பகவான் அருள்பாலிக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் சட்ட போராட்டங்கள் உதவி செய்யாது. ‘கிவ் அன்ட் டேக் பாலிசி’ தான் தீர்வாக இருக்க முடியும். இருமாநில விவசாயிகளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். காவிரி விவகாரத்தில் அரசியல் கலக்கக்கூடாது என்றார்.

The post திட்ட மதிப்பீடு தயாரிக்க வல்லுநர் குழு சேலம் உருக்காலை விரிவாக்கம் செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் குமாரசாமி உறுதி appeared first on Dinakaran.

Related Stories: