மேல்மலையனூர் தாசில்தார் அலுவலகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு உறவினர்கள் சாலை மறியல்

மேல்மலையனூர் செப். 29: மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த கெங்கபுரத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்(30). இவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக அப்பகுதியை சேர்ந்த சிலர், மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையிட்டிருந்தனர். இதையடுத்து வட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், தன்னுடைய நிலத்துக்கு போலி பட்டா மூலம் அரசுக்கு தொடர்ந்து தவறான தகவல் அளிக்கப்பட்டு வருவதாக கூறிய மோகன்ராஜ், வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததோடு, தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் மோகன்ராஜ் உடல் முழுவதும் தீ பரவியது. இதை தொடர்ந்து தீயை அணைத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், நேற்று காலை 10 மணிளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் மோகன்ராஜின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி அவரது உறவினர்கள் வளத்தி காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக செஞ்சி-சேத்பட் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post மேல்மலையனூர் தாசில்தார் அலுவலகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு உறவினர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: