அமராவதி பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு

 

உடுமலை, செப்.28: அமராவதி பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு அமைச்சர் சாமிநாதன் இன்று தண்ணீர் திறந்து விடுகிறார். உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், அமராவதி 10 பழைய வாய்க்கால்களில் (அலங்கியம் முதல் கரூர் வரை) பாசன பகுதிக்கு மொத்தம் 21,867 ஏக்கர் நிலங்களுக்கு ஆற்று வழியாக வினாடிக்கு 700 கன அடி வீதம் 4233 மில்லியன் கன அடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல, அமராவதி புதிய பாசன பகுதிகளில் மொத்தம் 25,250 ஏக்கர் நிலங்களுக்கு பிரதான கால்வாயில் இருந்து வினாடிக்கு 440 கனஅடி வீதம் 2661 மில்லியன் கன அடி நீர் திறக்கவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மொத்தம் 135 நாட்களுக்கு 70 நாட்கள் தண்ணீர் திறப்பு, 65 நாட்கள் அடைப்பு என்ற அடிப்படையில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (28-ம் தேதி) காலை 8 மணிக்கு மதகுகளை திறந்து வைத்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுகிறார். நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவருமான இல.பத்மநாபன், பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

The post அமராவதி பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: