திருமூர்த்தி அணையில் இருந்து கூடுதலாக ஒரு சுற்று தண்ணீர் திறப்பு

 

உடுமலை, டிச.18: திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி பாசனத்துக்கு கூடுதலாக ஒரு சுற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் பிஏபி பாசனத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இரண்டாம் மண்டல பாசனத்துக்கு கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

அப்போதைய நீர் இருப்பை கருத்தில் கொண்டு 4 சுற்று தண்ணீர் திறப்பது என நீர்வளத்துறை அதிகாரிகள், பாசன சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 14ம் தேதியுடன் நான்காம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பு நிறைவடைந்தது. இந்நிலையில், சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து. 60 அடி உயரம் கொண்ட அணையில் நீர்மட்டம் நேற்று 52 அடியாக இருந்தது.

போதுமான அளவு நீர் இருப்பு உள்ளதால் கூடுதலாக ஒரு சுற்று தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, 5ம் சுற்று தண்ணீர் நேற்று காலை திறக்கப்பட்டது. அணையில் இருந்து 948 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு 968 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வரும் ஜனவரி 10ம் தேதி வரை 5ம் சுற்றுக்கு தண்ணீர் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் 2ம் மண்டல பிஏபி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

The post திருமூர்த்தி அணையில் இருந்து கூடுதலாக ஒரு சுற்று தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: