திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக 52 பயணிகள் உயிர் தப்பினர். திருப்பூரில் இருந்து நேற்றிரவு 9.50 அரசு விரைவுப் பேருந்து ஒன்று திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 11 மணியளவில் தாராபுரம் புறவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்த போது இன்ஜின் கோளாறு காரணமாக பேருந்தில் இருந்து புகை வெளியேறியுள்ளது. தொடர்ந்து பேருந்தில் தீ பிடித்துள்ளது.

இதனைப்பார்த்து சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் கணேசமூர்த்தி (55) மற்றும் நடத்துனர் சிகாமணி (60) துரிதமாக செயல்பட்டு, பேருந்தில் இருந்த 52 பயணிகளையும் உடனடியாக கீழே இறக்கிவிட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அத்துடன் 10 நிமிடத்திற்குள் பேருந்து முழுவதும் மளமளவென பரவிய தீயால் பேருந்து முழுவதும் எறிந்துள்ளது. பேருந்தில் இருந்த தீயணைப்பான் மூலம் தீயை அணைக்கும் முயற்சி பலனளிக்கவில்லை.

பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பேருந்தில் வந்த 52 பயணிகளும் மாற்றுப் பேருந்துக்காக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் அமர்ந்திருந்த நிலையில், பயணிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், மாற்றுப் பேருந்து வரவழைக்கப்பட்டு அனைத்து பயணிகளும் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தீ விபத்து காரணமாக கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை நோக்கி செல்லும் புறவழிச்சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு! appeared first on Dinakaran.

Related Stories: