அரியலூர், செப். 27: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்தம் மற்றும் தினக் கூலி பணியாளர்கள் நியமன முறையை ரத்து செய்ய வேண்டும்.அவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரன் முறையைப்படுத்திட வேண்டும். பொதுத் துறை, அரசுத் துறைகளை குறைப்பது மற்றும் தனியார்மயமாக்கப்படுவதை உடனடியாக நிறுத்திட வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை காலமுறை ஊதிய திருத்தத்தை உறுதி செய்திட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டி.ஏ க்களை நிலுவையின்றி வழங்கிட வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். வருமானவரி உச்சரவரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் காமராஜ் தலைமை வகித்தார்.மாவட்டச் செயலர் ஷேக்தாவூத் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். வட்டச் செயலர் அம்பேத்கர், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் ரமேஷ், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்டச் செயலர் சிவக்குமார், தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகி இளையராஜா, மீன்வளத்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலர் சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
The post தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.