ஹெல்மெட் அணியாமல் வந்ததை தட்டிக்கேட்ட போக்குவரத்து காவலருக்கு மிரட்டல்: டாஸ்மாக் சூபர்வைசர் கைது

அண்ணாநகர்: ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்ததை தட்டிக்கேட்டதால், போக்குவரத்து காவலரின் செல்போனை உடைத்து, மிரட்டல் விடுத்த டாஸ்மாக் சூபர்வைசர் கைது செய்யப்பட்டார். சென்னை திருமங்கலம் என்.வி.என்.நகர் சந்திப்பு பகுதியில் கடந்த 19ம் தேதி போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, ஹெல்மெட் அணியாமல், பைக்கில் வேகமாக வந்த வாலிபரை மறித்தபோது, போலீசாரை ஆபாசமாக பேசிவிட்டு நிற்காமல் சென்றார்.

அந்த பைக் நம்பரை வைத்து, அந்த பகுதியில் பணியில் இருந்த காவலர் கார்த்திக்கு தகவல் கொடுத்து அந்த பைக்கை சுற்றிவளைத்து பிடித்தபோது, அந்த வாலிபர், எதற்காக பைக்கை நிறுத்தினீர்கள். நான் யார் தெரியுமா, என்று மிரட்டி ஆபாசமாக பேசியுள்ளார். இதை காவலர் தனது செல்போனில் வீடியோ எடுத்ததால் கோபமடைந்த அந்த வாலிபர், போக்குவரத்து காவலரின் செல்போனை பிடுங்கி சாலையில் போட்டு உடைத்துவிட்டு சென்றுவிட்டார்.

விசாரணையில், ஷெனாய் நகரை சேர்ந்த ராஜா (29) என்பது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் ஷெனாய் நகர் பகுதியில் டாஸ்மாக் கடையில் சூபர்வைசராக இருப்பது தெரிந்தது. அவர் மீது, 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

 

The post ஹெல்மெட் அணியாமல் வந்ததை தட்டிக்கேட்ட போக்குவரத்து காவலருக்கு மிரட்டல்: டாஸ்மாக் சூபர்வைசர் கைது appeared first on Dinakaran.

Related Stories: