நன்றி குங்குமம் தோழி
கைத்தறி நெசவு
என்பது ஒரு கலை. நாம் உடுத்தும் உடைகளை நேர்த்தியாகவும் நுணுக்கமாகவும் செய்யக் கூடிய அற்புதமான தொழில். இது தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதன் மூலம் தயாரிக்கப்படும் பல உடைகளும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அப்படிப்பட்ட ெதாழிலுக்கு மதிப்பு இருந்தாலும் அந்த ேவலையில் ஈடுபடுபவர்கள் மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.
உடை ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் அதனை செய்யக்கூடிய வேலையில் ஈடுபட யாரும் இன்றைய காலக்கட்டத்தில் முன்வருவதில்லை. காரணம், தற்போது இவை நலிந்து வருகிறது. மேலும் இந்தத் தொழிலை யாரும் கெளரவமாக பார்ப்பதில்லை. இந்த நிலையை மாற்றி இந்தத் தொழிலை யார் வேண்டும் என்றாலும் செய்ய முடியும். நமக்குத் தேவையான உடைகளை நாமே நெசவு செய்ய முடியும் என்பது மட்டுமில்லாமல், அதற்கான கைத்தறி நெசவு கருவிகளை உருவாக்கி ‘ராட்டை’ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார் கலையரசி ராமச்சந்திரன். கைத்தறி நெசவினை பெருமைமிக்க தொழிலாக மாற்ற வேண்டும் என்பதுதான் ராட்டையின் நோக்கம் என்கிறார் கலையரசி.
‘‘ஈரோடு அருகே உள்ள சலங்க பாளையம்தான் என்னோட ஊர். அங்கு கைத்தறி நெசவுத் தொழில் ரொம்பவும் பிரபலம். நான் முதுகலை பட்டப்படிப்பு முடிச்சிட்டு ஐ.டி துறையில் வேலைக்கு சேர்ந்தேன். ஒரு நாள் நான் எங்க ஊருக்கு வந்த போது அங்கிருந்த கைத்தறி நெசவாளர்கள் அந்தத் தொழிலை விட்டு விட்டு வேற வேலைக்கு சென்று விட்டார்கள். உணவு, உடை, இருப்பிடம்… இந்த மூன்றும் அடிப்படை தேவைகளில் ஒன்றான உடை தயாரிக்க பல்லாண்டு காலமாக உழைத்தவர்கள்.
ஆனால் அதற்கு சரியான அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால் அவர்கள் வறுமைக்கு தள்ளப்பட்டார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு இதை நம்பி இருக்க முடியாது என்பதால், அவர்கள் வேலையினை நாடி செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தார்கள். அவர்களின் அந்த நிலை எனக்குள் ரொம்பவே பாதிப்பினை ஏற்படுத்தியது. என்னுடைய படிப்பு அவர்களுக்கு உதவியா இருக்குமான்னு யோசித்தேன்.
ஆனால் அவர்கள் பயன்படுத்திய கைத்தறி மிகவும் பெரிய கருவி என்பதால் அதை வைக்க தனிப்பட்ட இடம் தேவைப்பட்டது. மேலும் அதனை இயக்க குறைந்தபட்சம் ஐந்து நபர்கள் வேண்டும். மேலும் துணிகளுக்கு சாயம் பூசுவதால், அதனால் ஏற்படும் ரசாயன சாயக்கழிவுகளால் எங்க ஊரில் ஏற்பட்ட பாதிப்பினை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அதனாலேயே இயற்கை சாயம் மற்றும் பருத்திக் கொண்டு நெசவு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இயற்கை சாயங்கள் ெபாறுத்தவரை 30 கிலோ நூல்கண்டுகளை வாங்கினால் தான் பயன்படுத்த முடியும் என்பதால் அதை நெசவாளர்கள் தவிர்த்து வந்தனர். இதை எளிதாக்கினால் நெசவுத் தொழிலை மீண்டும் மீட்டெடுக்கலாம் என்று தோன்றியது. அதன் அடிப்படையில் உருவானதுதான் ‘ராட்டை’ என்றவர் அதன் செயல்பாடு குறித்து விவரித்தார்.
‘‘நாங்க நெசவாளர் குடும்பம் என்றாலும் எனக்கு கைத்தறி நெசவு குறித்து தெரியாது. அப்போது எனக்கு அதுகுறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படல. ஆனால் இப்போது அதுவே என்னுடைய தொழிலாக மாறியதால், திருப்பூர், சேலம், காரைக்கால், ஈரோடு, கோயம்புத்தூர், காஞ்சிபுரம் என கைத்தறி தொழில் பிரபலமாக இருக்கும் இடத்திற்கு சென்றேன். அங்குள்ள நெசவாளர்களிடம் கைத்தறி நெசவுத் தொழிலை கற்றுக்ெகாண்டேன்.
அதன் பிறகு சிறிய அளவில் ஒருவர் மட்டுமே பயன்படுத்தும் வகையில் சின்னச் சின்ன பொருட்களை அவர்களே தயாரித்து கொள்ளும் வகையிலும் கைக்கு அடக்கமான நெசவு கைத்தறி ஒன்றை அறிமுகப்படுத்தி அதனை விற்பனையும் செய்து வருகிறோம். இயற்கை சாயங்களை பயன்படுத்துவதுடன் வாழைநார், சணல் போன்ற பொருட்களில் இருந்து ஆர்கானிக் நூல்களை இதன் மூலம் தயாரிக்க முடியும். இந்த நெசவு கருவி கைக்கு அடக்கமாக இருப்பதால், மேலும் நெசவு செய்வதும் எளிது என்பதால், நமக்குத் தேவையான துணியினை நாமே நெய்து கொள்ளலாம். மேலும் இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கையேட்டையும் கருவியுடன் இருக்கும் க்யூஆர் கோட்டினை ஸ்கேன் செய்தால் போதும்.
இந்தக் கருவியினை மூன்று வகைகளில் தயாரிக்கிறோம். அதில் முதல் வகை ‘வீவ் மேட்’. இது 3 வயது குழந்தைகள் கூட பயன்படுத்தலாம். இதில் தறி சட்டம், இயற்கையாக சாயம் பூசப்பட்ட நூலும் இருக்கும். இதைப் பயன்படுத்தி சிறிய பணப்பைகள், பர்ஸ்கள், சுவர் அலங்காரங்களை தயாரிக்கலாம். அடுத்து ‘வீவ்அல்லி’. சிறிய டேபிள் அளவில் இருக்கும் இதை பயன்படுத்தி கைப்பைகள், ஸ்டோல்கள் தயாரிக்க முடியும். மூன்றாவது ‘வீவ்ஃபிட்’, துண்டுகள், கைக்குட்டைகள் மற்றும் வீட்டு அத்தியாவசிய பொருட்களை கூட நெசவு செய்ய பயன்படுத்தலாம். எங்களின் நோக்கமே நெசவுத் தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான். இந்தக் கருவிகளை நெசவாளர்களிடம் மட்டுமில்லாமல் மக்களிடமும் அறிமுகப்படுத்தினோம். கவனம் சிதறாமல் வேலையில் ஈடுபடுவதால், மன அழுத்தம் குறைவதாக பலர் கூறினர்.
நெசவாளர்களை தொடர்ந்து இந்தக் கருவியினை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களின் கற்பனைக்கு ஏற்ப துணிகளை நெசவு செய்ய சொன்னோம். ஒவ்வொரு குழந்தையும் விதவிதமான துணிகளை செய்தனர். கவனம் சிதறாமல் இரண்டு கைகளுக்கும் வெவ்வேறு வேலைகளை ஒரே நேரத்தில் கொடுக்கும் போது அவர்களின் சிந்தனைத்திறன் அதிகரிக்கிறது. நாள் முழுவதும் செல்போனிலேயே இருக்கும் இவர்களுக்கு இது ஒரு நல்ல மாற்றத்தினை கொடுத்தது. மேலும் திரையில் செலவிடும் நேரமும் குறைந்தது.
அதனைத் ெதாடர்ந்து பள்ளிகளுக்கு நேரடியாக சென்று கைத்தறி நெசவுத் தொழில் மற்றும் கையடக்க நெசவு கருவிகளைப் பற்றி விளக்கினோம். மேலும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதுவரை 50 பயிற்சி வகுப்புகள் நடத்தி இருக்கிறோம். நெசவு என்பது ஒரு கலை. இது அனைத்து மக்களிடமும் செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு’’ என்று கூறும் கலையரசி ரைசிங் ஸ்டார் ஆஃப் தி இயர் என்ற விருதினை பெற்றுள்ளார்.
தொகுப்பு: மா.வினோத்குமார்
The post கைக்கு அடக்கமான கைத்தறி… நொடியில் தயாராகும் உடைகள்! appeared first on Dinakaran.