ராமநாதபுரம், செப்.25: பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா நேற்று ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் ஆண்டுதோறும் அக்.28 முதல் 30ம் தேதி வரை முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 117ம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 62வது குருபூஜை விழா அவரது நினைவாலயத்தில் நடைபெறுகிறது. அக்.28ம் தேதி காலை ஆன்மீக விழா யாக சாலை பூஜைகளுடன் துவங்கி, 29ம் தேதி அரசியல் விழா, 30ம் தேதி ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா, அரசு விழாவும் நடக்க உள்ளது. இதில் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.
இதனையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தென்மண்டல ஐஜி பிரேம்ஆனந்த் சின்கா நேற்று ஆய்வு செய்தார். அவரை தேவர் நினைவாலய அறங்காவலர் காவலர் காந்திமீனாள் நடராஜன் குடும்பத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து தேவர் நினைவாலயம், இல்லம், புகைப்பட கண்காட்சி மற்றும் முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் வழி, வெளிப்புற பகுதிகள், பொதுமக்கள் வந்து செல்லும் வழிகள் மற்றும் கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து ராமநாதபுரம் சரக டிஐஜி அபினவ்குமார், எஸ்.பி சந்தீஷ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
The post பசும்பொன் தேவர் குருபூஜை: தென்மண்டல ஐஜி ஆய்வு appeared first on Dinakaran.