புதுச்சேரி, செப். 25: புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு 2வது நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. டெங்கு, மலேரியா பரவி வருவதால் மருத்துவமனைகளில் கூட்டம் தற்போது அதிகமாகி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தீவிர காய்ச்சல் காரணமாக புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நகர பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அமைச்சரின் உடல்நிலை சீராகி வருவதால் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிகிறது.
இதனிடையே அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை கேள்விப்பட்ட முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பாஜ நிர்வாகிகள், ஆதரவாளர்கள் உடல்நலம் குறித்து நேரிலும், செல்போன் மூலமாகவும் அமைச்சரின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தனர். இதுதொடர்பாக அமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அமைச்சர் நமச்சிவாயத்துக்கு லேசான காய்ச்சல்தான். எந்தவித தொற்று நோயும் இல்லை. தற்போது அவர் குணமாகி வருகிறார். விரைவில் அவர் நலமுடன் வீடு திரும்புவார் என தெரிவித்தனர்.
The post தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி appeared first on Dinakaran.