மோதலுக்கு தீர்வு சமாதான பேச்சுவார்த்தை; உக்ரைன் – ரஷ்யா போருக்கு தீர்வு காண இந்தியா அர்ப்பணிப்புடன் உதவும்: உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி மீண்டும் உறுதி


நியூயார்க்: உக்ரைன் – ரஷ்யா போருக்கு தீர்வு சமாதான பேச்சுவார்த்தை அவசியம். மோதலுக்கு தீர்வு காண இந்தியா அர்ப்பணிப்புடன் உதவும் என உக்ரைன் அதிபரிடம் மோடி உறுதி அளித்துள்ளார். பிரதமர் மோடி 3 நாள் பயணமாக கடந்த 21ம் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசிய அவர், குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து ஜப்பான், ஆஸ்திரேலியா நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். அதன்பின் நியூயார்க் சென்ற மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 79வது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு இந்தியா புறப்படும் முன்பாக அமெரிக்காவில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதித்தனர். அப்போது “சமாதான பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். மோதலுக்கு அமைதியான, நீடித்த தீர்வை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் கூடிய ஆதரவை வழங்க இந்தியா எப்போதும் தயாராக உள்ளது” ” என ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி மீண்டும் உறுதிபட தெரிவித்தார். ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில், “நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினேன்.

அப்போது இருநாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் உக்ரைன் சென்றபோது எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த நாங்கள் உறுதி எடுத்து கொண்டோம். உக்ரைனில் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அமைதி, ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இந்தியாவின் ஆதரவை மீண்டும் தெரிவித்தேன்” என பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன் எக்ஸ் பதிவில், “பிரதமர் மோடியை இந்த ஆண்டு 3வது முறையாக சந்தத்துள்ளேன். நாங்கள் எங்கள் உறவுகளை தீவிரமாக வளர்த்து வருகிறோம். பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த செயல்படுகிறோம்” என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தன் 3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி நேற்று நாடு திரும்பினார்.

சீக்கிய மக்களுடன் மோடி சந்திப்பு
முன்னதாக சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து விஸ்கான்சினில் உள்ள முக்கிய சீக்கிய சமூக தலைவர் தர்ஷன் சிங் தலிவால் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, “கர்தார் சாஹேப் வழித்தடம் திறப்பு, குருநானக்கின் 550வது பிறந்தநாளின் 500 நாள் விழாக்கள் என சீக்கியர்களுக்காக மற்ற பிரதமர்கள் செய்யாததை மோடி செய்துள்ளார்” என புகழ்ந்துரைத்தார்.

The post மோதலுக்கு தீர்வு சமாதான பேச்சுவார்த்தை; உக்ரைன் – ரஷ்யா போருக்கு தீர்வு காண இந்தியா அர்ப்பணிப்புடன் உதவும்: உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி மீண்டும் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: