*சப்-கலெக்டர் அர்பித் ஜெயின் தகவல்
விகேபுரம் : விகேபுரம் நகராட்சி மூலம் வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் வீடுகளில் இருந்து நேரடியாக கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று சப்-கலெக்டர் அர்பித் ஜெயின் தெரிவித்தார். பாபநாசம் தலையணையில் இருந்து விவசாயத்திற்கு வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் வழியாக தண்ணீர் விடப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கால்வாய் பொதிகையடி, அனவன்குடியிருப்பு, டாணா, விகேபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், மன்னார்கோவில், வாகைகுளம் ஆகிய ஊர்களுக்கு செல்கிறது.
மொத்தம் 18 ஆயிரத்து 861 நீளம் கொண்ட இக்கால்வாயின் மூலம் அம்பை தாலுகாவில் 2280 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறுகிறது. மொத்தம் 54 கன அடி நீர் செல்லக்கூடிய கால்வாயில் அமலை செடிகள் அடைத்து தண்ணீர் கடைமடை வரை செல்லவில்லை.
குறிப்பாக, விகேபுரம், சிவந்திபுரம் பகுதிகளில் சில இடங்களில் கழிவுநீர் நேரடியாக வாய்க்காலில் கலப்பதால் ஆங்காங்கே சேறும், சகதியுமாக உள்ளது. கால்வாய்களில் பல இடங்களில் அமலை செடிகள் ஆக்கிரமித்துள்ளது. இதனை அகற்றவும் நீர்வளத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தற்போது கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடை வரை சேராததால் வாகைகுளம், மன்னார்கோவில் ஆகிய பகுதிகளில் நெற்பயிர்கள் கருகியது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதையடுத்து என்கேஎஸ்கே நதியுன்னி கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தலைவர் மாரிமுத்து மற்றும் விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்திடம் கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு வழிவகை செல்ல வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அர்பித் ஜெயின் விகேபுரம் பகுதியில் வடக்கு கோடை மேலழகியான் கால்வாயை நேற்று நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது நீர்வளத்துறை அதிகாரிகள், விகேபுரம் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் நேரடியாக கால்வாயில் வெளியேற்றப்படுவதால் அமலைசெடிகள் வளர்வதற்கு வாய்ப்பாக உள்ளது. கால்வாயில் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது’ என்றனர். தொடர்ந்து சப்-கலெக்டர் ஆர்பிட் ஜெயின், விகேபுரம் நகராட்சி பணி மேற்பார்வையாளர் கோமதி நாயகத்திடம் இது பற்றி கேட்டறிந்தார். இதற்கு அவர் தற்காலிகமாக 10 நாட்களுக்குள் கழிவுநீர் வெளியேறும் இடங்களில் தற்காலிகமாக கம்பி வலை (கிரில்) வைத்து சுத்திகரிக்கப்பட்டு வாய்க்காலில் விழுவதற்கு வசதி செய்யப்படும். நிரந்தரமாக விரைவில் இதற்கு தீர்வு காணப்படும்’’ என்றார்.
இதுகுறித்து சப் கலெக்டர் அர்பித் ஜெயின் கூறுகையில் ‘‘வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் விகேபுரம் நகராட்சி பகுதியில் கழிவு நீர் வெளியேறும் இடங்களில் தற்காலிகமாக கம்பி வலை அமைக்கப்படவிருக்கிறது. விரைவில் வீடுகளில் இருந்து நேரடியாக கழிவுநீர் கலக்காத வண்ணம் தீர்வு காணப்படும்’’ என்றார். ஆய்வின்போது அம்பை தாசில்தார் மல்லிகா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அப்துல் ரகுமான், உதவி பொறியாளர் ராம் சூர்யா, பாசன ஆய்வாளர் முருகன், கால்வாய் மண்டல உறுப்பினர் சங்கரநாராயணன் முன்னாள் மண்டல உறுப்பினர் சுப்பிரமணியன் உடனிருந்தனர்.
இதனிடையே என்கேஎஸ்கே நதியுன்னி கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தலைவர் மாரிமுத்து, வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் கழிவுநீர் விடப்பட்டால் விகேபுரம் நகராட்சி மீது கோர்ட்டில் வழக்குத் தொடர்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
The post வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் வீடுகளில் இருந்து நேரடியாக கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை appeared first on Dinakaran.