புதிய குடிநீர் தொட்டி கட்ட மக்கள் வலியுறுத்தல்

 

கீழக்கரை,செப்.24: கீழக்கரை வடக்கு தெரு 7வது வார்டுக்கு உட்பட்ட மணல்மேடு பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. விபத்து ஏற்படும் முன் அகற்றி விட்டு புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டி தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரையில் 21 வார்டுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்களும் உள்ளன. வடக்கு தெரு பகுதியில் 40 வருடத்திற்கு முன் கட்டப்பட்ட 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு செல்லும் படிக்கட்டுகள் இடிந்து விழுந்து பல வருடங்கள் ஆகியும், இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தொட்டி கான்கிரீட் அனைத்தும் துண்டு துண்டாக பெயர்ந்து கீழே விழுந்து கொண்டிருக்கிறது. இந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைந்துள்ள இடத்தின் அருகே நூற்றுக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

இந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி எந்த நேரத்தில் விழும் என்ற பயத்தில் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேல்நிலை தொட்டி தானாக இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படும் முன்பு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டியை அகற்றி விட்டு, புதிய மேல்நிலைத் தொட்டி கட்டி தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post புதிய குடிநீர் தொட்டி கட்ட மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: