தசரா திருவிழாவுக்கு 10 நாட்களே உள்ளதால் குலசேகரன்பட்டினத்தில் பாசி மாலை விற்பனை ஜோர்

உடன்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா துவங்குவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் ஏராளமான பாசிமாலை விற்பனையாளர்கள் குவிந்து விரதம் இருந்து பாசிமாலைகள் தயாரித்து வருகின்றனர். ரூ.60 முதல் ரூ.350 வரை மாடல், மாடலாக பாசிகள் விற்பனைக்கு குவித்து வைக்கபட்டுள்ளதால் வியாபாரம் படுஜோராக நடந்து வருகிறது.

மைசூருக்கு அடுத்தப்படியாக வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஆகும். இந்த ஆண்டு தசரா திருவிழா வரும் அக்டோபர் 3ம்தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கி அக்டோபர் 12ம்தேதி நள்ளிரவு சூரசம்காரம் நடக்கிறது. இதனைத்தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு வருவதுடன், தசரா திருவிழாவில் கடுமையான விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் 61, 41, 21, 11நாட்கள் என அவரவர் சூழலுக்கு தகுந்தாற்போல் விரதம் மேற்கொள்வர். விரதம் மேற்கொள்ளும் நபர்கள் குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் புனித நீராடி கடற்கரை பகுதியில் விற்பனை செய்யப்படும் பாசி மாலைகளை வாங்கி கடலில் கழுவி சாமியின் பாதத்தில் வைத்து கழுத்தில் அணிந்து கொள்வர்.

தசரா திருவிழாவையொட்டி பாசி மாலைகளை விற்பனை செய்ய நெல்லை, வள்ளியூர், பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வந்து தங்கியுள்ளனர். ரூ.60 முதல் ரூ.350 வரை மாடல், மாடலாக பாசிகள் விற்பனைக்கு குவித்து வைக்கபட்டுளளது. சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பிருந்து கடற்கரை வரை ஏராளமான பாசி மாலை விற்பனை செய்யும் நரிக்குறவர்கள் தங்களது குடும்பத்துடன் குவிந்து காணப்படுகின்றனர்.

அந்த பகுதியிலேயே குடில் அமைத்தும் அல்லது பாசி மாலையை தொங்க விட்டிருக்கும் நிழலிலேயே இருந்தும் கடுமையான விரதம் மேற்கொண்டு பாசி மாலையை தயாரித்து வருகின்றனர். மேலும் கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் ஏராளமானோர் குடும்பத்துடன் தங்கியிருந்து பாசிமாலை விற்பனை செய்து வருகின்றனர். தற்போது தசரா திருவிழா நெருங்கி வரும் வேளையில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால் பாசி மாலை விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

The post தசரா திருவிழாவுக்கு 10 நாட்களே உள்ளதால் குலசேகரன்பட்டினத்தில் பாசி மாலை விற்பனை ஜோர் appeared first on Dinakaran.

Related Stories: