ஆற்காடு அருகே 2 நாள் தேடுதலுக்கு பிறகு மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சடலம் மீட்பு

ஆற்காடு : ஆற்காடு அருகே மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி 2 நாள் தேடுதலுக்கு பிறகு நேற்று சடலமாக மீட்கப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த பெரிய உப்புப்பேட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன்(45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், கஜேந்திரன் நேற்று முன்தினம் மாலை மது போதையில் பெரிய உப்புப்பேட்டையில் சாலை ஓரம் நடந்து சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள பாழடைந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி திலகவதி ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து, ஆற்காடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், தீயணைப்பு நிலைய அலுவலர் பரிமளா தேவி தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் தவறி விழுந்த கஜேந்திரனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக தேடியும் கிடைக்காததால் நேற்று முன்தினம் இரவு தேடும் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, மீண்டும் நேற்று காலை வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன், வாலாஜா தாசில்தார் அருள்செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி மற்றும் தாலுகா போலீசார் முன்னிலையில் ஆற்காடு தீயணைப்பு படையினர் கஜேந்திரனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு நேற்று பகல் 11.40 மணி அளவில் கஜேந்திரன் சடலத்தை மீட்டு தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆற்காடு அருகே 2 நாள் தேடுதலுக்கு பிறகு மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: