டெல்லி: ‘குவாட்’ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்ற நிலையில், இந்த உச்சி மாநாட்டை சீனா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. அமெரிக்காவில் நடக்கும் ‘குவாட்’ உச்சி மாநாடு, ஐ.நா பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று அதிகாலை டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இந்த உச்சி மாநாடு அமெரிக்காவின் டெலாவேரில் நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சொந்த ஊரான டெலாவேரில் நடப்பதால், மோடி – பைடன் இடையிலான பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘குவாட்’ என்ற சொல் குவாட்ரிலேட்டரல் அதாவது நாற்கர வார்த்தையின் குறுகிய பெயர் ஆகும். பெயரில் குறிப்பிடுவது போல, இது நான்கு நாடுகளை உள்ளடக்கியது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பாகும். கடந்த 2007ல் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும். அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவுடன் கூட்டு கடற்படை பயிற்சிகள் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட இந்தியாவுக்கு குவாட் அமைப்பு ஒரு தளத்தை வழங்குகிறது. இதன்மூலம் இந்திய கடற்படையின் திறன் அதிகரிக்கிறது.
அதனால் குவாட் அமைப்பை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. எனவே, குவாட் என்பது சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் ஒரு வழிமுறை என்றும் நம்பப்படுகிறது. குவாட் அமைப்பு நாடுகள் பாதுகாப்பில் மட்டுமல்லாது, பொருளாதார ரீதியாகவும் இணைந்துள்ளன. குறிப்பாக இணைய பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணம், காலநிலை மாற்றம், தொற்றுநோய்கள் மற்றும் கல்வி வரையிலான பிற உலகளாவிய பிரச்னைகளிலும் கவனம் செலுத்துகிறது. குவாட் அமைப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதை சீனா விரும்பவில்லை. இந்த நாடுகள் ஒன்றிணைந்தால் அதனால் உலகளாவிய எழுச்சியை ஏற்படுத்தும் என்று சீனா கருதுகிறது.
அதனால் ஆரம்பத்திலிருந்தே குவாட்டை சீனா எதிர்த்து வருகிறது. மேலும் சீனாவின் நலன்களுக்கு குவாட் தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக சீன வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. பல சந்தர்ப்பங்களில், குவாட்டை ஆசிய நாடுகளின் நோட்டோ என்று சீனா கூறியுள்ளது. மற்ற வல்லரசு நாடுகளுடன் இந்தியா கூட்டணி அமைத்தால், எதிர்காலத்தில் தனக்கு பெரிய பிரச்னைகளை உருவாக்கலாம் என சீனா அஞ்சுகிறது. கடந்த 2017 முதல் செயலில் இறங்கிய குவாட், இதுவரை 4 உச்சிமாநாடுகளை நடத்தியுள்ளது. குவாடின் முதல் தலைவர்கள் கூட்டம் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது.
இரண்டாவது கூட்டம் 2021 செப்டம்பர் 24ல் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நான்கு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். குவாடின் மூன்றாவது கூட்டம் 2022 மே மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. நான்காவது கூட்டம் கடந்தாண்டு மே 19ல் ஜப்பானிலேயே நடைபெற்றது. இந்நிலையில் ஐந்தாவது கூட்டம் இன்று தொடங்கி வரும் 23ம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெறுகிறது. அடுத்த உச்சி மாநாடு 2025ல் டெல்லியில் நடைபெற உள்ளது.
மோடியின் பங்களிப்பு என்ன?
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகின் நான்கு பெரிய நாடுகளின் தலைவர்களில், போர் எதிரிகளாக மாறிய உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் அதிபர்களை சமீபத்தில் பிரதமர் மோடி நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார். ‘ஒன் டு ஒன்’ உரையாடல் மூலம் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோரிடம், இருதரப்பு போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில், பிரதமர் மோடி மீண்டும் குவாட் உச்சி மாநாட்டில் அமைதிக்கான முயற்சியை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரை தடுப்பது போல், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட இந்தியா தரப்பில் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படுகிறது. இதுகுறித்தும் தலைவர்கள் விவாதிக்கலாம்.
குவாடால் இந்தியாவுக்கு என்ன நன்மை?
குவாட் அமைப்பின் மூலம் இந்தியா பல நன்மைகளைப் பெற்றுள்ளது. இந்தியப் பெருங்கடலில் கடல் வலிமை அதிகரித்துள்ளது. சீனாவின் பொருளாதாரச் சார்பை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமை குறைந்துள்ளது. குவாடில் இந்தியாவின் பங்களிப்பானது பிராந்திய அளவிலான புவிசார் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் பிராந்திய கூட்டாளிகளுடன் மிகவும் திறம்பட இந்தியாவால் செயல்பட முடியும்.
மோடியின் 9வது அமெரிக்க பயணம்
பிரதமர் மோடியின் 9வது அமெரிக்க பயணம் இதுவாகும். இதற்குமுன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 8 முறை (2004-2014) அமெரிக்கா சென்றுள்ளார். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது நான்கு முறை (1998-2004) அமெரிக்கா சென்றுள்ளார். ராஜீவ் காந்தி மூன்று முறை (1984-1989) அமெரிக்கா சென்றார். இந்திரா காந்தி அமெரிக்காவிற்கு மூன்று முறை (1966-1977, 1980-1984) சென்றார். நேரு நான்கு முறை (1947-1964) அமெரிக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்; ‘குவாட்’ உச்சி மாநாட்டை கண்டு சீனா அஞ்சுவது ஏன்?.. வல்லரசு நாடுகளுடன் இந்தியா கைகோர்த்ததால் தலைவலி appeared first on Dinakaran.