கரூர்: முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பியிடம் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு தொடர்பாக வாங்கல் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷின் ரூ100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலம் அபகரிப்பு மற்றும் கொலை மிரட்டல் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உறவினர் பிரவீன்(28), உடந்தையாக இருந்த வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கடந்த ஜூலை 16ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 3 பேரும் கடந்த மாதம் 31ம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்த வழக்கில் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை சிபிசிஐடி போலீசார் கடந்த 2ம் தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் சிபிசிஐடி காவலில் விசாரிக்க செப்டம்பர் 5ம் தேதி சேகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதில் 2 நாள் நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தி மீண்டும் 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தொழிலதிபர் பிரகாஷ் வாங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூடுதலாக கொலை மிரட்டல், ஆள்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் சேகர் கடந்த 11ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதால் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் சேகரை, வாங்கல் போலீசார் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு அளித்தனர். இந்த மனு மீதான விசாரணைக்காக திருச்சி சிறையில் இருந்து அழைத்து வந்து கரூர் நீதிமன்றத்தில் நேற்று மாலை சேகர் ஆஜர்படுத்தப்பட்டார். போலீஸ் காவலில் விசாரிக்க 2 நாள் அனுமதி கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து வாங்கல் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று ேநற்றிரவு 8 மணி முதல் 10 மணி வரை சேகரிடம் போலீசார் துருவித்துருவி விசாரித்தனர். இதைதொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் மீண்டும் சேகரிடம் விசாரணை நடந்து வருகிறது.
The post ரூ100 கோடி நில மோசடி வழக்கு: மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தம்பியிடம் துருவித்துருவி விசாரணை appeared first on Dinakaran.