மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரம் மனித உரிமை ஆணையம் வீடு வீடாக விசாரணை: 1,125 பக்க அறிக்கை தாக்கல்

நெல்லை: நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தின் குத்தகை காலம் 2029ம் ஆண்டுடன் முடிவடைகிறது. இதையடுத்து தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் டிஎஸ்பி ரவிசிங், இன்ஸ்பெக்டர் யோகேந்திரகுமார் திரிபாதி ஆகிய 2 பேர் அடங்கிய குழுவினர் நேற்று காலை நெல்லை வந்தனர். பின்னர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்த்திகேயன், எஸ்பி சிலம்பரசன், அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக துணை இயக்குநர் இளையராஜா ஆகியோர் அடங்கிய குழுவினருடன் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

அப்போது மாஞ்சோலை தொடர்பான முழு விவரங்கள், அது தொடர்பான நீதிமன்ற வழக்குகள், தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு எடுத்துள்ள மறுவாழ்வு நடவடிக்கைகள், அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆணையத்திடம் மாஞ்சோலை தொடர்பான முக்கிய ஆவணங்கள் அடங்கிய 1,125 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மனித உரிமை ஆணையக் குழுவினர் மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி வீடு, வீடாக சென்று விசாரணை நடத்தினர். இன்று முதல் 3 நாட்கள் தேயிலை தோட்டங்களை நிர்வகித்து வரும் பிபிடிசி நிர்வாகம், தொழிற்சாலை, தேயிலை தோட்டம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து பொதுமக்களிடம் மனுக்களும் பெறுகின்றனர்.

The post மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரம் மனித உரிமை ஆணையம் வீடு வீடாக விசாரணை: 1,125 பக்க அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: