ஒரு வருட சேமநலநிதியை வழங்ககோரி நாகை நகராட்சி அலுவலகத்தை தூய்மைப்பணியாளர்கள் முற்றுகை

 

நாகப்பட்டினம், செப்.17: நாகப்பட்டினம் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களிடம் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக பிடித்தம் செய்த தொழிலாளர் சேமநலநிதியை ஒப்பந்ததாரர் வழங்ககோரி தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளிலும் தூய்மை பணி மேற்கொள்ள 100க்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தூய்மை பணியாளர்களிடமிருந்து ஒப்பந்ததாரர் பிடித்தம் செய்யும் சேமநலநிதியை கடந்த ஒரு ஆண்டு காலமாக வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். பல முறை சேமநலநிதி அல்லது சேமநலநிதியின் கணக்கு எண் தெரிவிக்க வேண்டும் என்று ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் முறையாக பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று திடீரென வேலை நிறுத்தம் செய்து நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். நீண்ட நேரத்திற்கு பின்னர் தூய்மை பணியாளர்களிடம் தனியார் நிறுவனத்தின் பொறுப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டதால் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post ஒரு வருட சேமநலநிதியை வழங்ககோரி நாகை நகராட்சி அலுவலகத்தை தூய்மைப்பணியாளர்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: