×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்தமைக்காக சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் திருமாவளவன் அளித்த பேட்டி: அமெரிக்க சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விசிக சார்பில் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தோம். அமெரிக்காவில் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல ஆயிரம் கோடி முதலீடுகள் கையெழுத்தானது. இதற்கு முதல்வருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தோம். தமிழகத்தில் வரும் அக்டோபர் 2ம் தேதி விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது.

இதில் இரண்டு கோரிக்கை முன் வைக்கிறோம். முதலாவது, தமிழகத்தில் மது விற்பனை இலக்கு குறைக்க வேண்டும். இரண்டாவது, அரசியல் அமைப்பு சட்டத்தின்படி அனைத்து மாநிலங்கள் அரசும் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்.
மதுவிலக்கில் அண்ணா உறுதியாக இருந்தார். ஒன்றிய அரசுக்கு அப்போது அழுத்தம் கொடுத்தார். அத்துடன் கலைஞரும் மதுவிலக்கில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். அவர்களை போல முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்ற மனுவை கோரிக்கையாக கொடுத்துள்ளோம்.

மதுவிலக்குதான் திமுகவின் கொள்கை என்பதில் எந்த மாற்றமும் இல்லை எனவும், மாநாட்டில் திமுக சார்பில் அக் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் செய்தித் தொடர்பாளர் இளங்கோவனும் பங்கேற்பார்கள் என முதல்வர் தெரிவித்தார்.
மதுவிலக்கு தமிழ்நாட்டில் வர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நிர்வாகச் சிக்கலை கருத்தில் கொண்டு படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கும் இந்த மாநாட்டிற்கு எந்த சம்மதமும் இல்லை. பெண்களின் கோரிக்கையை முன்னிறுத்திதான் இந்த மாநாட்டை நடத்துகிறோம். இதனை திசை திருப்பும் வகையில் அரசியலுடன் இணைத்துப் பார்க்க வேண்டாம். விசிக-திமுக கூட்டணியில் எந்த ஒரு விரிசலும் இல்லை. எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். அதனை முன்னிறுத்துகிறோம்.

மது ஒழிப்பு என்பது மக்கள் பிரச்னை. எனவே இதற்கு அனைத்துக் கட்சிகளும் இணைந்து குரல் கொடுக்கும் என்பதுதான் என்னுடைய அறைகூவல். இதனை அரசியலுடன் முடிச்சு போட வேண்டாம். இந்தியாவில் போதைப் புழக்கம் அதிகமாக உள்ளது. எனவே இதனை குறைக்க ஒன்றிய அரசுக்கு பங்கு உள்ளது. ஏன் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க கூடாது என்பது எங்களுடைய கேள்வி. மது ஒழிப்பில் ஒன்றிய அரசுக்கு பொறுப்பிருக்கிறது என்று அண்ணா சொன்னதைத்தான் இன்று விசிக சொல்கிறது. இக் கருத்தில் திமுக உடன்படுவதால் மாநாட்டில் பங்கேற்க 2 பிரதிநிதிகளை அவர்கள் அனுப்பி வைக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,ANNA ,PH.D. K. Thirumaalavan ,Stalin ,Dima ,ANNA ADWARALAYAT DIMUKA ,FIRST MINISTER OF ,TAMIL NADU ,K. ,Liberation Leopards Party ,Thirumaalavan ,United States ,Anna Vidwalayathil ,Md. K. Thirumaalavan ,Dimuka ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர்...