×

பெண்களுக்கு மாதம் ரூ.2,000 .. முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,000 : காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி!!

புதுடெல்லி: பெண்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்று ஹரியானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.இந்நிலையில்,சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஹரியானாவில் 7 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, ஹரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவை பின்வருமாறு..

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம் வழங்கப்படும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

கிரீமி லேயரின் வருமான வரம்பை ரூ. 6 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தப்படும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், ஊனமுற்றோர் மற்றும் விதவைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 6,000 வழங்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும், வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், ரூ. 25 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.

பெண்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும். 2 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

 

The post பெண்களுக்கு மாதம் ரூ.2,000 .. முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,000 : காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி!! appeared first on Dinakaran.

Tags : Congress Party ,New Delhi ,Haryana assembly ,Haryana Legislature ,
× RELATED காந்தி ஜெயந்தியை முன்னிட்டு...