கோரிமேடு அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் தயார் குரங்கு அம்மை நோயிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை

*சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

புதுச்சேரி : குரங்கு அம்மை நோயிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கோரிமேடு அரசு மார்பக மருத்துவமனையில் 10 படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் குரங்கு அம்மை தடுப்பு வழி முறைகள் பற்றிய நெறிமுறைகளை வகுப்பதற்கான உயர்மட்ட குழு கூட்டம் இந்திரா காந்தி அரசு பொதுமருத்துவமனையில் நடைபெற்றது. சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேல் தலைமை தாங்கினார். இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள், அரசு மார்பு நோய் மருத்துவமனை கண்காணிப்பாளர், அரசு மருத்துவ கல்லூரி, ஜிப்மர் மருத்துவ கல்லூரி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செவ்வேல் கூறுகையில், குரங்கு அம்மை என்பது பெரியம்மை போன்ற அறிகுறிகளை கொண்ட ஒரு வைரஸ் நோயாகும். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, தற்போதைய தொடர் தொற்றானது உலகில் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகள் உள்ள மூன்று கண்டங்களில் குரங்கு அம்மை நோய் தொற்று உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெறிவித்துள்ளது. இந்தியாவில் குரங்கு அம்மை வைரஸ் அறிகுறிகளோடு உள்ள ஒரு நபர் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்ட பின் பாதிப்பு இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 21 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்தவர்களில் எந்த வயதினருக்கும், திடீரென வரும் உடல் முழுவதும் அரிப்பு மற்றும் அம்மை போன்ற நீர் அடங்கிய சிறு கட்டிகள், வீங்கிய நெரிக் கட்டிகள், காய்ச்சல், தலைவலி, உடல் வலிகள் போன்றவை குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகளாகும்.

ஒரு தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களோடு இணைப்பு ஏற்பட்டிருந்தாலும், நேருக்கு நேர் மிக அருகில் இருந்தாலும், பொருத்தமான பாதுகாப்பு கவச உடை (பிபிஇ கிட்) இல்லாமல் சுகாதார பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் தொற்று ஏற்படும். பாலியல் தொடர்பு உட்பட தோல் அல்லது தோல் புண்களுடன் நேரடி உடல் தொடர்பு, குரங்கு அம்மை தொற்று உள்ளவர்களின் ஆடை, படுக்கை அல்லது பாத்திரங்கள் போன்ற அசுத்தமான பொருட்களுடன் தொடர்பு இருந்தால் தொற்று ஏற்படும்.

புதுச்சேரியில் குரங்கு அம்மை நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள தேவையான அனைத்து முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மைக்கு பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 10 படுக்கை கொண்ட வார்டு கோரிமேடு அரசு மார்பக மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளது. மேலும், அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், கிராம செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து முன் நிலை சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் குரங்கு அம்மை பற்றிய தகவல் பகிரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நோய் பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்

சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேல் மேலும் கூறுகையில், நோயாளியுடன் தொடர்பில் இருந்த படுக்கை போன்ற எந்தவொரு பொருட்களுடனும் தொடர்பை தவிர்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட நோயாளிகளை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது மனிதர்களுடன் தொடர்பு கொண்ட பிறகு நல்ல கை சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். உதாரணமாக, சோப்பு மற்றும் தண்ணீருடன் கை கழுவுதல், அங்கீகரிக்கப்பட்ட கை சுத்தம் செய்யும் திரவத்தை பயன்படுத்தலாம்.

மேலும், மருத்துவரை கலந்தாலோசிக்காமல் பரிந்துரைக்கப்படாத மருந்துகள் அல்லது வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குரங்கு அம்மை அறிகுறி இருந்தால் உடனே தனிமைப்படுத்த தொடங்குங்கள். பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். எந்த நேரத்திலும் பதற்றம் அடைய வேண்டாம். குரங்கு அம்மை பற்றி சுகாதார பணியாளர்களிடம் ஆலோசனை பெறலாம். இதனால் தேவையற்ற பீதியை தவிர்க்கவும். என்றார்.

The post கோரிமேடு அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் தயார் குரங்கு அம்மை நோயிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: