அங்க மசூதி கிடையாது…அது சிவன் கோயில்.. காசி விஸ்வநாதரின் அவதாரமே ஞானவாபி: முதல்வர் யோகி சர்ச்சை பேச்சு

கோரக்பூர்: “ஞானவாபி மசூதி அல்ல, அது சிவன் கோயில், அங்குள்ள ஞானவாபி விஸ்வநாதரின் அவதாரம்” என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி பழமையான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி கோயிலை இடித்து கட்டப்பட்டுள்ளதால், அந்த இடத்தை இந்துக்களிடம் மீண்டும் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் கோரக்பூரில் உள்ள ஒரு பல்கலை கழகத்தில் நேற்று நடந்த கருத்தரங்கை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்து பேசினார். அப்போது, “ஞானவாயியை சிலர் மசூதி என அழைப்பது துரதிருஷ்டவசமானது. அது மசூதி அல்ல. ஒரு சிவன் கோயில். அதனுள் இருப்பது காசி விஸ்வநாதரின் அவதாரம். ஞானவாபி குறித்த குழப்பங்கள் வழிபாடு நடத்துவதற்கு மட்டுமின்றி, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பெரும் தடையாக இருப்பதாக இந்து பக்தர்கள் வருந்துகின்றனர்” என பேசினார். சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள யோகி ஆதித்யநாத்தின் பேச்சுக்கு சமாஜ்வாடி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

The post அங்க மசூதி கிடையாது…அது சிவன் கோயில்.. காசி விஸ்வநாதரின் அவதாரமே ஞானவாபி: முதல்வர் யோகி சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: