கொலிஜியம் பரிந்துரைப்படி நீதிபதிகளை நியமனம் செய்வதில் தாமதம் ஏன்? உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்

புதுடெல்லி: உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான கொலிஜியத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் ஒன்றிய அரசு தாமதிப்பது ஏன் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை நியமனம் செய்ய ஒன்றிய அரசுக்கு கால அவகாசம் நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஹர்ஷ் விபோர் சிங்கால் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த காலஅவகாசம் இல்லாததால் நீதிபதி நியமனங்களை அறிவிப்பதில் ஒன்றிய அரசு தன்னிச்சையாக தாமதப்படுகிறது எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜராகி, ‘‘இதுதொடர்பாக ஒன்றிய அரசிடம் இருந்து பெற்ற சில தகவல்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவை. அத்தகவல்களை பொது வெளியில் வெளியிடுவது நீதித்துறைக்கோ, நீதிபதிகளுக்கோ நன்மை தராது. எனவே அந்த தகவல்கள் மற்றும் எனது பரிந்துரைகளை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய விரும்புகிறேன்’’ என்றார். இதைத் தொடர்ந்து விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post கொலிஜியம் பரிந்துரைப்படி நீதிபதிகளை நியமனம் செய்வதில் தாமதம் ஏன்? உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் appeared first on Dinakaran.

Related Stories: