நேற்று பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டார். இந்நிலையில் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 3 இடங்களில் தனித்தனியாக நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். நேற்று முன்தினம் காலை கிஸ்த்வாரில் ராணுவ வீரர்கள் தீவிரவாதிகள் இடையே மோதல் வெடித்தது. இதில் தீவிரவாதிகளின் கண்மூடித்தனமான தாக்குதலில் ஜூனியர் அதிகாரி உள்பட 4 வீரர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். கையெறி குண்டில் காயமடைந்த வீரர் ஒருவரும், தலையில் குண்டுபாய்ந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட வீரரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பட்டான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ராணுவ வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் நெருங்கிய நிலையில் வீரர்கள் மீது அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வீரர்கள் கொடுத்த பதிலடியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் யார், எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. கடந்த 11ம் தேதி ராணுவத்தின் ரைசிங் ஸ்டார்ஸ் பிரிவினர் கதுவாவில் நடத்திய என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post ஜம்முவில் 3 என்கவுன்டர் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: 2 வீரர்கள் வீரமரணம் appeared first on Dinakaran.