பிரதமர் மோடி பிரசாரம் காஷ்மீரில் பயங்கரவாதம் கடைசி மூச்சை இழுத்து கொண்டிருக்கிறது

ஜம்மு: ‘காஷ்மீரில் பயங்கரவாதம் இறுதி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது’’ என பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். ஜம்மு காஷ்மீரில் நேற்று பாஜவின் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தோடா பகுதிக்கு நாட்டின் பிரதமர் செல்வது 42 ஆண்டுக்குப் பின் இதுவே முதல் முறை. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல், 3 குடும்பங்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையேயான தேர்தல். இதில் ஒருபுறம் காங்கிரஸ், தேசியமாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சிகள் உள்ளன. மறுபுறம் என் மகள்களும், சகோதாரிகளும் உள்ளனர். குடும்ப அரசியல் மூலம் இந்த 3 கட்சிகளும் அழகான காஷ்மீரை அழித்து விட்டன. ஊழலையும், நில அபகரிப்பாளர்களையும் ஊக்குவித்து மக்களின் உரிமைகளையும் வசதிகளையும் பறித்தனர். அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு மட்டுமே அரசு வேலை கொடுத்தனர். பிரிவினைவாதம், தீவிரவாதத்திற்கான அடித்தளத்தை உருவாக்கினர்.

இப்போது காஷ்மீரில் தீவிரவாதிவாதம் கடைசி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான மாற்றங்கள் நடந்துள்ளன. ஜம்முவிலிருந்து காஷ்மீரில் இணைக்கப்படாத ரயில் வழித்தடங்கள் விரைவில் இணைக்கப்படும். காஷ்மீர் மக்கள் நேரடியாக டெல்லிக்கு ரயிலில் வரலாம். இவ்வாறு கூறினார். இதே போல, அரியானா மாநிலத்தில் குருஷேத்ராவில் நேற்று பிரசாரத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ‘‘ ஒன்றிய அரசு 3வது முறையாக பதவி ஏற்று இன்னும் 100 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் ரூ.15 லட்சம் கோடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன’’ என்றார்.

* தீவிரவாதம் அதிகரித்துள்ளது
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் மோடி 3வது முறையாக ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 98 நாட்களில் 25 தீவிரவாத தாக்குதலில் 21 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகி உள்ளனர். 15 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கெல்லாம் யார் பதில் சொல்வார்கள்?’’ என்றார்.

The post பிரதமர் மோடி பிரசாரம் காஷ்மீரில் பயங்கரவாதம் கடைசி மூச்சை இழுத்து கொண்டிருக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: