மகாபலி சக்கரவர்த்தி கேட்ட வரம்

மூன்றடி நிலம் கேட்டு வந்தவனிடம் அந்த நிலங்களை அளந்து கொள்ளச் சொல்லிவிட்டு கடைசியில் தன்னுடைய தலையையும் பகவானுடைய காலடியில் வைத்தான் மகாபலி சக்கரவர்த்தி. அப்பொழுது அவன் ஒரு வரம் கேட்டான். ‘‘பகவானே! நான் இப்பொழுது பாதாள உலகுக்குச் செல்கின்றேன். இருந்தாலும் நான் தேசத்தை விட்டு செல்வது வருத்தமாக
இருக்கிறது. எனவே, ஆண்டுதோறும் ஒரு நாள், நான் வந்து, இந்த மண்ணையும் மக்களையும் சந்திக்கும்படியாக வரம் அருள வேண்டும்” என்று வேண்ட, அதைப் போலவே மகாவிஷ்ணு மகாபலிக்கு வரம் தந்து அருளினார்.

மகாபலியும், ஆவணி மாதம், திருவோண நன்னாளில் வந்து, தான் ஆண்ட மண்ணையும், மண்ணில் உள்ள மக்களையும் பார்த்துச் சந்தோஷப்பட்டு, எல்லோருக்கும் நல்வாழ்த்துக்களையும், நல்வாழ்க்கையையும் கொடுப்பதாக ஐதீகம். அப்படி வருகின்ற மகாபலியை, மக்கள் வரவேற்பதற்குத் தயாராக, மலர்களால் கோலமிட்டு, மங்கல தோரணங்கள் கட்டி, அழகு படுத்துகிறார்கள். பல்வேறு வகையான பணியாரங்களைத் தயார் செய்து, படைத்து உண்டு மகிழ்கின்றனர்.

பதவி தரும் திருவோணம்

பகவான் பிறந்த இந்த திருவோண நட்சத்திரத்திற்கு பல சிறப்புகள் உண்டு. ஒவ்வொரு கிரகத்துக்கும் மூன்று நட்சத்திரங்கள் உண்டு. அதில் சந்திரனுக்கு உரிய நட்சத்திரங்களில் ஒன்று இந்த திருவோணம். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகச் சிறந்த மனிதாபிமானத்தோடு இருப்பார்கள். மிகுந்த தைரியசாலிகளாகவும், எதையும் திறமையோடு கையாள்பவர்களாகவும், தெய்வ பக்தி மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள்.

திருவோணத்தில் பிறந்தவர்கள் உலகத்தை ஆளக்கூடிய சிறப்பு பெறுவார்கள் என்பதை, பெரியாழ்வார் ‘‘திருவோணத்தான் உலகாளும் என்பார்களே” என்ற பாசுரத்தில் கோடிட்டுக் காட்டுகிறார். சூரியனுக்குரிய ஆவணி மாதத்தில் சந்திரனுக்குரிய திருவோண நட்சத்திரத்தில் பகவான் அவதரித்து இந்த உலகத்தை தன்னுடைய திருவடியால் அளந்தான் என்பது திருவோண பண்டிகைக்கு உரிய விசேஷம்.

பத்து நாட்கள் திருஓணம்

கேரள தேசத்தில் இதை அறுவடைத் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். ஹஸ்த நட்சத்திரத்தில் ஆரம்பித்து, திருஓணம் வரை பத்து நாட்கள் இந்தப் பண்டிகையை அவர்கள் கொண்டாடுகின்றார்கள். சங்க இலக்கியத்தில் வாமன அவதாரத்தைக் கொண்டாடிய நாளாக ஓணம் குறிக்கப்படுகிறது. ஆறுவகை சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் பலவகையான உணவுகள் தயாரிக்கப்படும் திருநாளாக இந்த திருநாள் விளங்குகின்றது. அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அழகான பூ கோலம் போடுவார்கள். அதற்கு “அத்தப்பூ கோலம்” என்று பெயர். அழகான வெண்ணிற ஆடைகளை மக்கள் அன்றைக்கு உடுத்திக் கொள்வார்கள். வண்ணக் கோலமிட்டு, நடுவில் ஐந்து முக விளக்கை ஏற்றி வைத்து, கும்மி, கோலாட்டம் என்று விதம் விதமாக ஆடிப்பாடும் அற்புதத் திருநாள் இது. கேரள தேசத்தில் பாரம்பரியமான படகுப் போட்டியும் ஓணம் பண்டிகையை ஒட்டி நடக்கும்.

சந்தோஷ வாழ்வைத் தரும் திருவோணம்

இந்தத் திருவோண மூர்த்தியை வழிபடுவதன் மூலமாகவும், வாமன ஜெயந்தியை வீட்டிலேயே இனிப்பு பலகாரங்களைப் படைத்து, பகவானை நினைத்து பாசுரம் பாடி, பூஜை செய்வதாலும், இடையூறுகள் நீங்கும். சந்திரதசை நடப்பவர்கள் அவசியம் இந்தப் பூஜையைச் செய்வது சந்தோஷ வாழ்வைத் தரும். திருவோண நன்னாளில் உலகளந்த பெருமாளை நினைத்தால் உன்னத வாழ்க்கையைப் பெறலாம். மகாபலிச் சக்கரவர்த்தி, தானம் தந்ததன் மூலமாக, தனிப்பெரும் பெருமையை அடைந்தான்.

அதனால் இந்த ஓணம் பண்டிகை தானத்தின் சிறப்பைச் சொல்வது. ஆகையினால் உங்களால் இயன்ற பொருளை இல்லாதவர்களுக்குக் கொடுத்து மகிழ்வது, இப்பண்டிகையின் உண்மையான ஏற்றத்தை காண்பிக்கும். அதைச் செய்பவர்களுக்கு அளவில்லாத பலனைத் தரும். காரணம், பகவான் மிக அருமையாக சொல்லுகின்றான். ‘‘நீ ஒரு மடங்கு தந்தால், ஒன்பது மடங்கு தருவேன்.’’ ஆம்; நீங்கள் மற்றவர்களுக்குச் செய்கின்ற சிறுஉதவி, ஆயிரம் மடங்கு பெருகி, உங்களுக்கு வரும் என்பதை அனுபவத்தில் உணர்வீர்கள். அதற்கான பண்டிகைதான் இது.

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்

The post மகாபலி சக்கரவர்த்தி கேட்ட வரம் appeared first on Dinakaran.

Related Stories: