நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி பற்றி குறை கூறியதற்கு அன்னபூர்ணா உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டாரா? வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி; வீடியோ வெளியிட்டது யார் என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் ஓட்டம்

கோவை: நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி பற்றி குறை கூறியதற்கு அன்னபூர்ணா உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டாரா? என்பது குறித்து வானதி சீனிவாசன் பரபரப்பு விளக்கமளித்து உள்ளார். மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியிட்டது யார் என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் ஓட்டம் பிடித்தார். கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பா.ஜ மகளிர் அணி தேசிய செயலாளருமான வானதி சீனிவாசன் ஏற்பாட்டின் பேரில் கோவை கொடிசியா அரங்கில் கடந்த 11ம் தேதி நடந்த தொழில்முனைவோர் கருத்தரங்கில், கடந்த 11ம் தேதி நடந்தது. இதில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

அவரிடம், கோவையை சேர்ந்த தொழில்முனைவோர், தங்களது தொழிலில் உள்ள நெருக்கடி குறித்தும், அதற்கு தீர்வுகாண ஒன்றிய நிதியமைச்சகம் முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது பேசிய கோவை அன்னபூர்ணா ஓட்டல் குழும தலைவர் சீனிவாசன், ‘ஸ்வீட்டுக்கு 5%, காரத்துக்கு 12%, கிரீமுக்கு 18% ஜிஎஸ்டி போடுறீங்க.. ஒரே பில்லுல ஒரு குடும்பத்துக்கு விதவிதமா ஜிஎஸ்டி போட்டு கொடுக்குறது கஷ்டமா இருக்கு. கம்ப்யூட்டரே பில் போட திணறுது மேடம்… உங்க எம்எல்ஏ (வானதி சீனிவாசன்) டெய்லியும் சண்ட போடுறாங்க…’ என்று தனக்கு உரிய பாணியில் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வரைலானது.

இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை நிருபர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் பன்னுக்கு வரி இல்லை. கீரிம் போட்டால் வரி என ஜனரஞ்சகமான வார்த்தையில் கேள்வி எழுப்பினார். அதில் தவறு இல்லை. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையின் பேரில்தான் வரி விதிக்கப்படுகிறது. ஜனரஞ்சகமாக அவர் பேசுவதால் ஊறுகாய் மாமியை கேள்வி கேட்டுவிட்டார் என கூறலாம். அதுபற்றி எனக்கு கவலையில்லை’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரலானது. இதற்கு அரசியல் கட்சியினர், தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்களும் என பல்வேறு தரப்பினர், ‘சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்ததாக கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வானதி சீனிவாசன் நேற்று கோவையில் நிருபர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: ஒன்றிய நிதி அமைச்சர் தொழில்துறையினரை சந்தித்து அவர்களது பிரச்னைகளை கேட்டறிந்தார். அன்னபூர்ணா உரிமையாளர் எனக்கு சகோதரர் போன்றவர். அவர், இனிப்பு, காரம் தனித்தனியாக ஜிஎஸ்டி போடுவது பற்றி அமைச்சரிடம் கருத்து தெரிவித்தார். அப்போது, என்னை பார்த்து, ‘‘எம்எல்ஏ அம்மா எங்க கடைக்கு வருவாங்க. ஜிலேபி சாப்பிடுவாங்க. டீ குடிப்பாங்க, சாப்பிடுவாங்க, அப்புறம் சண்டையும் போடுவாங்க’’ என கூறினார். அதுக்கு நான் அப்போது உடனடியாக ரியாக்ட் பண்ணல. அவரிடம் என்னால் அப்போதே திருப்பி கேள்வி கேட்டு இருக்க முடியும்.

நான் உங்கள் கடைக்கு எத்தனை முறை வந்து இருக்கிறேன். எப்போதாவது வந்து நான் சண்டை போட்டு இருக்கேனா? அல்லது எத்தனை முறை நான் வந்து ஜிலேபி சாப்பிட்டு இருக்கேன். நீங்க சொன்ன ஜிலேபியை நான் சாப்பிட்டது இல்லை. இதை நான் மேடையில் சொல்லி இருக்க முடியும். நான் அதை விரும்பவில்லை. ஏனென்றால் அது பொது மேடை. என்னதான் நான் அவரை மதிக்கக்கூடியவளாக இருந்தாலும், என்னதான் எங்களுக்குள் ஒரு நட்பு இருந்தாலும் எம்எல்ஏ, ஒரு தொழில் அதிபராக இருந்தாலும் அந்த இடத்தில் இருந்து நான் எழுந்துவந்துவிட்டேன்.

இந்நிலையில், நேற்று காலை 7 மணி முதல் அவர் எனக்கு தொடர்ச்சியாக போன் செய்து நான் தவறாக பேசிவிட்டேன் என வருத்தம் தெரிவித்தார். அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நேரம் கூறுங்கள் வருகிறேன் என்றார். அதன் பிறகு அவர் நேற்று மதியம் ஓட்டலுக்கு வந்து நிதி அமைச்சரை சந்தித்தார். நான் பேசிய விஷயம் தவறுதான். நான் உங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டேன். இது சமூக வலைத்தளத்தில் வேறு மாதிரி சென்றுவிட்டது. நீங்கள் மனது புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் ஆர்.எஸ்.எஸ்-ஐ சார்ந்தவர் என அவரே கூறினார். அப்போது அமைச்சர் உங்கள் உணவகத்தில் வந்து வாடிக்கையாளர் சாப்பிடும் உணவு குறித்து வெளியில் சொல்வது முறையா? என கேள்வி கேட்டார்.

அதன்பிறகு அவர் என்னிடம், நீங்கள் சகோதரி மாதிரி என கூறி என்னிடமும் மன்னிப்பு கேட்டார். இதுதொடர்பான வீடியோவை சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளனர். இந்த சம்பவம் நடந்தபோது அங்கு பின்னால் ஒரு சில கட்சிகாரர்கள் இருந்தார்கள். பொதுமேடையில் வைத்து நம்ம எம்எல்ஏவை இப்படி சொல்லிட்டாங்க என்ற வருத்தம் எங்க கட்சிக்காரங்களுக்கு இருக்கு. அரசியலில் பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் இல்லை என நான் கூறுவேன். நான் பெண் அரசியல்வாதி. எனக்கு கருணை காட்டுங்கள் என நான் சொல்ல வரவில்லை. அந்த மேடையில் ஆண் அமைச்சர், ஆண் எம்எல்ஏ இருந்தால் இது போன்று பேச வாய்ப்பு இருக்கிறதா? என்பதை யோசித்துப் பாருங்கள். சமுதாயத்தில் பெண்தானே என்ற ஒரு பார்வை அனைவரிடமும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, ‘‘நீங்கள் ஒரு தனி நபரை டார்கெட் செய்து அவரை மிரட்டி மன்னிப்பு கேட்ட வீடியோவை வெளியிட்டு இருக்கிறீர்கள்’’ என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், ‘‘நாங்க அவரை மிரட்ட பாக்குறோமா?, அன்னபூர்ணா உரிமையாளரை நாங்கள் மிரட்டி அழைத்து வந்து மன்னிப்பு கேட்க வைக்கவில்லை. நாங்க யாரையும் டார்கெட் செய்ய வேண்டிய அவசியமில்லை. நீங்க கேள்வி கேட்கக்கூடிய ஆள் நான் இல்லை. அன்னபூர்ணா உரிமையாளர்தான். ஆணவம், அதிகாரத்தை பயன்படுத்தி இருக்கீங்களா? என பல விஷயங்கள் இந்த விவகாரத்தில் சென்று கொண்டு இருக்கிறது. அன்னபூர்ணா உரிமையாளரை நேரில் நீங்கள் சென்று பார்த்து அவரிடம் நான் கூறியதில் பொய் இருக்கிறதா? என கேட்டு தெரிந்து கொள்ளலாம்’’ என்றார்.

‘‘அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் எப்படி வெளியானது? அதற்கு பதில் கூறுங்கள்’’ என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ஆவேசமாக பதில் அளித்த அவர், ‘‘அந்த இடத்தில் பாஜ தவிர பல கட்சியை சேர்ந்தவர்கள் இருந்தார்கள். யார் வேண்டுமானாலும் வெளியிட்டு இருக்கலாம்’’என மழுப்பலான பதிலை தெரிவித்தார். அப்போது நிருபர்கள், பாஜ ஊடக பிரிவுதான் வீடியோ வெளியிட்டதாக கூறுகிறார்களே என்று கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. பின்னர், நிருபர்கள் அடுத்து அவருக்கு ஐ.டி. ரெய்டு வருமா? என கேள்வி எழுப்பினர், அப்போது கோபமடைந்த வானதி சீனிவாசன் கேள்விக்கு பதில் அளிக்காமல் பேட்டியை பாதியில் முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

நிர்மலா சீதாராமனிடமும், என்னிடமும் அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்டார். இதுதொடர்பான வீடியோவை சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளனர். இந்த சம்பவம் நடந்தபோது அங்கு பின்னால் ஒரு சில கட்சிகாரர்கள் இருந்தார்கள். பொதுமேடையில் வைத்து நம்ம எம்எல்ஏவை இப்படி சொல்லிட்டாங்க என்ற வருத்தம் எங்க கட்சிக்காரங்களுக்கு இருக்கு. பாஜ ஊடக பிரிவுதான் வீடியோ வெளியிட்டதாக கூறுகிறார்களே என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. பின்னர், நிருபர்கள் அடுத்து அவருக்கு ஐ.டி. ரெய்டு வருமா? என கேள்வி எழுப்பினர், அப்போது கோபமடைந்த வானதி சீனிவாசன் கேள்விக்கு பதில் அளிக்காமல் பேட்டியை பாதியில் முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

* உள்நோக்கத்துடன் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியீடு
சீனிவாசன் நேற்று முன்தினம் பிற்பகலே மன்னிப்பு கேட்டதாக வானதி சீனிவாசன் கூறுகிறார். ஆனால் அதன்பிறகு மாலையில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், ‘சீனிவாசன் ஜனரஞ்சகமான வார்த்தையில் கேள்வி எழுப்பினார். அதில் தவறு இல்லை’என்று கூறினார். அப்போது அவர் மன்னிப்பு கேட்ட விவரத்தை நிர்மலா சீதாராமன் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் அன்னபூர்ணா உரிமையாளர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டார் என்று வீடியோவை பாஜ ஐடி விங் பரப்பியது. இந்த வீடியோவில் சீனிவாசனுக்கு தெரியாமல் அவர் கூனி குறுகி பேசுவதை பின்னால் இருந்து வீடியோ எடுத்து உள்நோக்கத்துடன் பரப்பப்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

The post நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி பற்றி குறை கூறியதற்கு அன்னபூர்ணா உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டாரா? வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி; வீடியோ வெளியிட்டது யார் என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: