45வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்; 2வது ரவுண்டில் ஐஸ்லேண்டை வீழ்த்தியது இந்திய ஆடவர் அணி: செக் குடியரசுக்கு எதிராக மகளிர் அணி அபாரம்


புதாபெஸ்ட்: ஹங்கேரியில் உள்ள புதாபெஸ்ட்டில் நேற்று நடந்த 45வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் 2வது ரவுண்ட் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஐஸ்லேண்ட் அணிக்கு எதிராகவும், மகளிர் அணி செக் குடியரசுக்கு எதிராகவும் மோதினர். இதில் இந்தியாவின் பிரக்யானந்தா மற்றும் அவரது சகோதரி வைஷாலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, முதல் நிலை ஆட்டக்காரர்களான குகேஷ் மற்றும் ஹரிகா துரோனவல்லி களம் இறங்கினர். இதில் அபாரமாக ஆடிய இந்திய ஆடவர் அணியின் குகேஷ் கிராண்ட் மாஸ்டர் விக்னிர் வத்னர் ஸ்டெபேன்சனையும், அர்ஜூன் எரிகைசி ஹன்னெஸ் ஸ்டெபான்சனையும், பென்டாலா ஹரிகிருஷ்ணா ஹெல்ஜி ஆஸ் கிரெடார்சனையும் வீழ்த்தினர். மேலும் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை பெற்ற ஹில்மிர் பிரெயர் ஹெய்மிசனை இந்தியாவின் விதித் குஜராத்தி வீழ்த்தியது நேற்றைய நாளின் சிறப்பான போட்டியாக அமைந்தது.

ஏற்கெனவே முதல் ரவுண்டில் மொரோக்கோ அணிக்கு எதிராக 4 புள்ளிகளை பெற்ற இந்திய ஆடவர் அணி நேற்று ஐஸ்லேண்டுக்கு எதிராகவும் 4 புள்ளிகளை கைப்பற்றியது. இதை தொடர்ந்து செக் குடியரசுக்கு எதிராக மோதிய இந்திய மகளிர் அணி 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதில் இந்தியாவின் முன்னணி விராங்கனை ஹரிகா துரோனவல்லி ஜூலியா மொவ்சேசியனையும், திவ்யா தேஷ்முக் நடாலி கனகோவாவையும், வந்திகா அகர்வால் தெரசா ரோட்ஷ்டெய்னையும் வீழ்த்தி வெற்றி கண்டனர். தானியா சச்தேவ் மற்றும் மார்டினா கொரேனோவாவுக்கு எதிரான போட்டி டிராவில் முடிந்ததால் இருவருக்கும் 0.5 புள்ளிகள் கிடைத்தன.

The post 45வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்; 2வது ரவுண்டில் ஐஸ்லேண்டை வீழ்த்தியது இந்திய ஆடவர் அணி: செக் குடியரசுக்கு எதிராக மகளிர் அணி அபாரம் appeared first on Dinakaran.

Related Stories: