மதுரையில் தீ விபத்து நடந்த கட்டடத்தை இடிக்கும் பணி தொடக்கம்!

மதுரை: மதுரை கட்ராபாளையம் பெண்கள் விடுதி அமைந்துள்ள கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. தீ விபத்து ஏற்பட்டதில் 2 ஆசிரியைகள் உயிரிழந்த நிலையில் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கப்பட்டது. சேதமடைந்த கட்டிடத்தை பணியாளர்கள் உதவியுடன் இடிக்கும் பணி தொடங்கியது. சேதமடைந்த கட்டிடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் இடிக்கும் பணி தொடங்கியது. மதுரை மாநகரின் மையப்பகுதியில் பெரியார் பஸ் நிலையம் அமைந்து இருக்கிறது.

பெரியார் பஸ் நிலையத்தின் அருகே கட்ராபாளையம் தெருப்பகுதியில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று இருந்தது. இதில் கீழ் பகுதியில் மருத்துவமனை, மருந்தகம், அடுத்தடுத்து கடைகள் உள்ளன. முதல் மற்றும் 2-வது தளத்தில் 20-க்கும் மேற்பட்ட தங்கும் அறைகள் உள்ளன. இங்கு மதுரை மட்டுமின்றி சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள், மாணவிகள் தங்கி இருந்து வேலை செய்தும், கல்லூரிகளில் படித்தும் வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் அறைகளில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அதிகாலை 4.20 மணி அளவில் திடீரென அந்த விடுதியின் ஒரு அறையில் இருந்த பிரிட்ஜில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. உடனே தீ அங்கிருந்த பொருட்கள் மீது மளமளவென பரவியது. மிகவும் குறுகலான அறைகள் என்பதால், அடுத்தடுத்த அறைகளுக்கும் கண் இமைக்கும் நேரத்தில் தீ பரவியுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திடீர்நகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்து தீயில் சிக்கியவர்களை ஒவ்வொருவராக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால், பரிமளா, சரண்யா ஆகிய 2 ஆசிரியைகள் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தனர். காயம் அடைந்த 3 பேருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் தீ விபத்து நடந்த 3 தளங்கள் கொண்ட கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது.

 

The post மதுரையில் தீ விபத்து நடந்த கட்டடத்தை இடிக்கும் பணி தொடக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: