திருபுவனை நான்குமுனை சந்திப்பு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கடைகள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு

*போலீசாரை பணியமர்த்த கோரிக்கை

திருபுவனை : புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து விட்டன. அதற்கேற்ப போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதனை சரிசெய்ய கூடுதல் காவலர்கள் பணி அமர்த்தப்படவில்லை. இதனால் சாலை சந்திப்புகளில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, அதற்கான பணிகள் தொடர்ந்து வேகமாக நடந்து வருகிறது. மதகடிப்பட்டு, திருபுவனை, திருவாண்டார்கோவில் ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன. கண்டமங்கலம் பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள் நடப்பதால் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.

திருபுவனை பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் ஒரு புறம் மட்டுமே சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு புறம், பனை மரங்களை அகற்ற சென்னை மண்டல பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் மதகடிப்பட்டு பாளையம், திருபுவனை பாளையம், கஸ்தூரிபாய் நகர் குடியிருப்பு பகுதி, மேலும் பள்ளிநேலியனூர், நல்லூர், மண்டகப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பு வழியாக வந்து திருபுவனை வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் அரியூர் வழியாக கீழூர் மண்டகப்பட்டு வந்து, திருபுவனை வழியாக விழுப்புரம் செல்கின்றனர். இது ஒரு வழி பாதையாக மட்டும் உள்ளது. இதில் ஒரு சில பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் எதிர் திசையில் செல்கின்றன. இதனால் இச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி, பேருந்து ஓட்டுநர்கள், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படும் நிலை உள்ளது. மேலும், திருபுவனை மேம்பாலத்தின் கீழே கடைகள் அதிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு பொருட்களை வாங்குகின்றனர்.

இதனாலும் அப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருபுவனை நான்கு முனை சந்திப்பு வழியாக திருபுவனை தொழிற்பேட்டைக்கு செல்லும் தொழிலாளர்கள் வாகனங்களில் மேம்பாலம் வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேம்பாலத்தின் கீழ்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கின்றனர். அங்கு போக்குவரத்து போலீசார் இல்லாததால் தினமும் போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது `பீக்ஹவர்ஸ்’ எனப்படும் பரபரப்பான நேரங்களில் வாகனங்கள் ஆமை வேகத்தில் சாலையை கடந்து செல்லும் அவலநிலை உள்ளது. இதுபோன்ற நேரங்களில் பள்ளி, கல்லூரி, அரசு, தனியார் தொழிலாளர்கள், ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு புகார் தெரிவித்தவுடன் காவலர்கள் வந்து உடனே போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்திவிட்டு சென்று விடுகின்றனர். ஆனால் மற்ற நேரங்களில் போக்குவரத்து போலீசார் இருப்பது இல்லை. இதனால் அடிக்கடி வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. மதகடிப்பட்டு, திருபுவனை, திருவாண்டார்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிலும் பள்ளி மற்றும் மருத்துவமனைகள், தொழிற்பேட்டைகள் உள்ளன.

இப்பகுதியில் சில நேரங்களில் கனரக வாகனங்கள் திரும்ப முடியாமல் போக்குவரத்து தடைபடுகிறது. சாலை ஓரங்களிலும், பாலத்தின் கீழ்புறம் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மதகடிப்பட்டு, திருபுவனை, திருவாண்டார்கோவில் பகுதிகளில் முழுநேர போக்குவரத்து காவலர்களை பணியமர்த்த வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

இதுகுறித்து மதகடிப்பட்டுபாளையம் பகுதியை சேர்ந்த புஷ்பநாதன் கூறுகையில், திருபுவனை நான்குமுனை சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.‌ இப்பகுதியில் சினிமா தியேட்டர், தனியார் மேல்நிலைப்பள்ளி, வணிக வளாகம், வங்கிகள், மெடிக்கல் ஷாப், தனியார் கிளினிக் உள்ளிட்டவைகள் உள்ளன. அதனால் அதிகப்படியான வாகனங்கள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றன.‌ இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் வாகனங்கள் சாலையிலேயே தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே போக்குவரத்து போலீசாரை அங்கு பணியில் அமர்த்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றார்.

பனை மரங்களால் சாலை அமைப்பதில் சிக்கல்

திருபுவனை பகுதியை சேர்ந்த மணிபாலன் கூறுகையில், திருபுவனை பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் மட்டுமே சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் பனை மரங்கள் உள்ளதால், அதனை எடுக்கக்கூடாது என சென்னை பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் திருபுவனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வரக்கூடிய இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் மதகடிப்பட்டு மேம்பாலத்தின் கீழ் வந்து, திருபுவனை பகுதிக்கு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் திருபுவனை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே திருபுவனை பகுதியில் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்தினால் மட்டுமே போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியும் என்றார்.

The post திருபுவனை நான்குமுனை சந்திப்பு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கடைகள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: