அயலக தமிழர் நல வாரியம் சார்பில் டெக்ஸாஸ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களுடன் கலந்துரையாடல்

காங்கயம் : தமிழ்நாடு அயலக தமிழர் நலவாரியம் சார்பில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரத்தில் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் பயிலும் தமிழக மாணவர்களுடனான கலந்துரையாடலில் தமிழக அரசின் பல்வேறு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.கடந்த 2021ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பெற்றவுடன் வெளிநாடுகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக செல்லும் தமிழர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் அயலக தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டது. இவ்வாரியம் மூலம் வெளிநாடுகளில் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புலம்பெயர் தமிழர் நல வாரியம் சார்பில் அமெரிக்காவின் டெல்லாஸ் நகரத்தில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ்நாடு மாணவர்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் சமூக நீதி, ஜனநாயகம், கல்வி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழ் மாணவர்களுக்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் விவாதிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் கார்த்திகேய சிவசேனாபதி பேசுகையில், ‘‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வையுடன் புலம்பெயர்ந்த தமிழர்கள் நல வாரியத்தை நிறுவி உள்ளார்.

உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் கல்வி மற்றும் தொழில் முயற்சிகளுக்கு ஆதரவு கிடைப்பதை உறுதி செய்வதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு, அத்தகைய முயற்சிகளை வளர்ப்பதற்கான கருவி கல்வி, வழிகாட்டுதல் மற்றும் பரஸ்பர ஆதரவின் மூலம் வலுவான உலகளாவிய தமிழ் சமூகத்தை உருவாக்குவதற்கான பார்வையை இந்த கலந்துரையாடல் உறுதிப்படுத்துகிறது. இந்த இலக்குகளை மேலும் முன்னெடுப்பதற்கு முறையான வழிகாட்டல் வலையமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட தினகர் ரத்தினசபாபதிக்கு நன்றி’’ என்றார்.

மேலும் இந்நிகழ்வில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்கும் தமிழ் இளைஞர்கள், தமிழ்நாட்டிலுள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சர்வதேச அளவில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளைப் பெறுவதற்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்து பேசப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்கள் சொந்த கல்வியோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் இணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்தனர்.

மாணவரின் பேச்சு வைரல்

கலந்துரையாடலில் பேசிய தமிழ்நாடு மாணவர் ஒருவர் பேசியபோது, ‘‘திமுக முதலமைச்சர்கள் அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோர் மேற்கொண்ட திட்டங்களால் நான் பயன் பெற்றுள்ளேன். வெளிநாடுகளில் தமிழர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளதற்கு முழுக்க, முழுக்க அவர்களின் முற்போக்கான சமூக நீதி திட்டங்களே காரணம். ஆனால் அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் நிறைய பேருக்கு அந்த புரிதலே இல்லை’’ என்றார். மாணவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The post அயலக தமிழர் நல வாரியம் சார்பில் டெக்ஸாஸ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களுடன் கலந்துரையாடல் appeared first on Dinakaran.

Related Stories: