போலி முகவர்களை நம்பி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டாம்: காவல்துறை எச்சரிக்கை

சென்னை: அதிக சம்பளம் என ஆசை வார்த்தைகள் கூறும் போலி முகவர்களை நம்பி வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் கைநிறைய சம்பளம் என ஆசை வார்த்தைகளால் ஏமாற்றி முகவர்கள் மூலம் சுற்றுலா விசாவில் இந்தியர்கள் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். ஆனால், அங்கு வேலைக்கு சென்ற பலர் சைபர் கிரைம் கும்பலிடம் அடிமைகளாக சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சைபர் கிரைம் கும்பலிடம் சிக்கி இருப்பதாக விசாரணையில் உறுதியாகியுள்ள நிலையில், வேலை செய்ய மறுப்பவர்களை எலக்டிரிக் ஷாக் கொடுத்து சைபர் கிரைம் கும்பல் கொடுமைப்படுத்தும் அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் இந்தியர்களை டார்கெட் செய்யும் கும்பல் கடந்த ஓராண்டில் மட்டும் 10,188 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தை அறிந்து விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு காவல்துறை 9 வழக்குகளை பதிவு செய்து 10 முகவர்களை கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து 1,285 பேர் செய்துள்ளதாக கிடைத்த தகவல் அடிப்படையில் லாவோஸ் நாட்டில் இருந்து 121 தமிழர்களும், கம்போடியாவில் இருந்து 50க்கும் மேற்பட்டவர்கள் என மொத்தம் 186 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் சைபர் கிரைம் அடிமைகளாக சிக்கி இருப்பவர்கள் தமிழ்நாடு திரும்ப ஏதுவாக வெளிநாடு வாழ் தமிழர்கள் பிரிவில் காவல் கண்காணிப்பாளர் தொலைபேசி எண், அயலக நலத்துறை ஆணையரகத்தின் உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர்கள் சுற்றுலா விசாவில் அழைத்து செல்லும் தரகர்களை நம்பி செல்ல வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

The post போலி முகவர்களை நம்பி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டாம்: காவல்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: