சென்னை முழுவதும் நேற்று இரவு மின்தடை: போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு: 100% மின் விநியோகம்

சென்னை: அலமாதி 400/230 கி. வோ. துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் சென்னையில் ஏற்பட்ட மின் தடை, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 100% மின்சாரம் சரி செய்யப்பட்டது.

மணலி துணை மின் நிலையம் (400/230 கிலோவோல்ட்) சென்னையின் முக்கியமான மின்சார மையமாக விளங்குகிறது. இது நகரின் முக்கிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குகிறது. வழக்கமாக, இந்த துணை மின் நிலையம், அலமாதி மற்றும் NCTPS II மின்னூட்டிகளிலின் வழியாக மின்சாரத்தை பெற்றும் சுமார் 800 முதல் 900 மெகாவாட் அளவிலான மின்சாரத்தினை சென்னையின் முக்கிய துணை மின் நிலையங்களான புளியந்தோப்பு, மணலி, தண்டையார்பேட்டை, மயிலாப்பூர் ஆர்.ஏ. புரம். பேசின் பிரிட்ஜ். வியாசர்பாடி, மற்றும் செம்பியம் ஆகியவற்றின் வாயிலாக, சென்னையின் முக்கிய பகுதிகளான மயிலாப்பூர், லஸ், சாந்தோம், நுங்கம்பாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை, டோல்கேட், சைதாப்பேட்டை, வியாசர்பாடி, செம்பியம். கொளத்தூர். பெரியார் நகர். மாதவரம், புழல், ரெட் ஹில்ஸ், கொடுங்கையூர், அண்ணா சாலை, பாரிஸ், மேற்கு ஜார்ஜ் டவுன். எழும்பூர். மற்றும் சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கான மின்சாரத்தை விநியோகித்து வருகிறது.

செப்டம்பர் 12, 2024 அன்று, இரவு சுமார் 09:58 மணி அளவில், மேற்கண்ட 400/230 கி.வோ. மணலி துணை மின் நிலையத்தின் மின்சாரம் வழங்கும் இரண்டு மின்னூட்டி ஆதாரங்களும் இயக்கத்தில் இருந்த போதும், எதிர்பாராத விதமாக 400/230 கி.வோ. அலமாதி துணை மின்நிலையத்தில் ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக, மணலி துணை மின்நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு 400 கிலோ வோல்ட் மின் ஆதாரங்களின் (அலமாதி மற்றும் NCTPS II) அடுத்தடுத்த மின்தடைக்கு வழிவகுத்தது. மேலும், இத்துணை மின் நிலையத்தில், ஒரு ஜம்பர் துண்டிப்பும் கண்டறியப்பட்டது.

தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இருப்பினும், இந்த இரட்டை மின் ஆதாரங்களின் செயலிழப்பு காரணமாக மயிலாப்பூர். லூஸ், சாந்தோம். நுங்கம்பாக்கம். ராயபுரம். தண்டையார்பேட்டை டோல்கேட். சைதாப்பேட்டை வியாசர்பாடி. செம்பியம். கோளத்தூர், பெரியார் நகர்.மாதவரம், புழல், ரெட் ஹில்ஸ், கொடுங்கையூர், அண்ணா சாலை, பாரிஸ். மேற்கு ஜார்ஜ் டவுன், எழும்பூர், மற்றும் சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்தடை ஏற்பட்டது.

மின் தடை காரணமாக, பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை நீக்கி, மாற்று வழியில் மின்சாரம் விநியோகம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட போது. கீழ்க்கண்ட மின்னூட்டிகளில் அதிக மின் பளு காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டது.

* 230 கி. வோ. வட சென்னை – தண்டையார்பேட்டை 1 மற்றும் 2 ஆகிய மின்னூட்டிகள் ஜம்பர் துண்டிப்பு.

* 230 கி.வோ. கலிவேந்தம்பட்டு . தரமணி மின்னூட்டியில் ஜம்பர் துண்டிப்பு

* 230 கி.வோ. ஸ்ரீபெரும்புதூர் – தரமணி மின்னூட்டியில் ஜம்பர் துண்டிப்பு.

இதனால், மின்சாரம் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும், போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கி விட்டு, மாற்று வழியில் மின்சாரத்தை மீட்டு எடுக்கும் பணிகள் இரவு 11 மணி அளவில் தொடங்கப்பட்டு, நள்ளிரவு 12 மணி அளவில் அண்ணாசாலை, சிந்தாதிரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், செம்பியம், பெரியார் நகர் பகுதிகளுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களுக்கும். 13.09.2024 காலை 01 மணி அளவில் புளியந்தோப்பு, கொளத்தூர் பகுதிகளுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களுக்கும். 02 மணி அளவில் மணலி, மயிலாப்பூர், வியாசர்பாடி, அடையாறு மற்றும் எண்ணூர் பகுதிகளுக்கு என சென்னை மாநகரம் முழுவதும் 100% மின்சாரம் சீரமைக்கப்பட்டது.

மேற்கண்ட மின்தடை காரணமாக, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள்ளது.

The post சென்னை முழுவதும் நேற்று இரவு மின்தடை: போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு: 100% மின் விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories: