விருப்பம் இருந்தால் 3வது மொழியை கற்கலாம் தமிழக மாணவர்கள் இருமொழிக் கொள்கையைத்தான் விரும்புகின்றனர்: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் பதிவாளர்கள், சென்னையில் உள்ள கல்லூரி முதல்வர்கள், மண்டல இணை இயக்குநர்கள், ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. அதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பங்கேற்று பேசியதாவது: இந்த ஆண்டுக்கான பொறியியல் படிப்புக்கான சேர்க்கையில் 15 ஆயிரம் மாணவ மாணவியர் கடந்த ஆண்டைவிட கூடுதலாக சேர்க்கை பெற்றுள்ளனர்.

பொறியியல் படிப்பில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 706 மாணவ மாணவியர் இதுவரை சேர்ந்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மட்டும் மாணவ மாணவியர் சேர்ந்துள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கை பெற்ற மாணவ மாணவியரின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் தனியாக உள்ளன. இதுதவிர அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் 23ம் தேதி மாணவ மாணவியர் நேரடியாக வளாக சேர்க்கை மூலம் சேரலாம். மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உயர்வுக்குப் படி’ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

இந்ததிட்டத்தின் மூலம் பிளஸ் 2 வகுப்பு படித்துவிட்டு உயர்கல்விக்குச் செல்லாமல் இருக்கும் மாணவர்கள், பிளஸ்2 வகுப்பில் தேர்ச்சிபெறாமல் உள்ள மாணவர்கள், பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்வதற்கும், 10ம் வகுப்பில் தேர்ச்சிபெறாத மாணவர்கள் ஐடிஐ பயிற்சியில் சேர்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உயர்வுக்குப் படி என்ற திட்டத்தின் மூலம் இம்மாதம் 23ம் தேதி வரை கல்லூரிகளில் மாணவர்கள் சேரலாம்.

தமிழகத்தை பொருத்தவரையில் மாணவர்கள் மும்மொழிக் கொள்கையை காட்டிலும் இரு மொழிக் கொள்கையைத்தான் விரும்புகின்றனர். சென்னை மாநிலக் கல்லூரியில் மலையாளம், இந்தி போன்ற பிரிவுகள் இருக்கின்றன. அதேபோல சில கல்லூரிகளிலும் இருக்கிறது. ஆனால் அவற்றில் குறைந்த எண்ணிக்கையில்தான் மாணவர்கள் சேர்கின்றனர்.

The post விருப்பம் இருந்தால் 3வது மொழியை கற்கலாம் தமிழக மாணவர்கள் இருமொழிக் கொள்கையைத்தான் விரும்புகின்றனர்: அமைச்சர் பொன்முடி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: