×

நாளை குரூப் 2, 2ஏ தேர்வு சப்-கலெக்டர் தலைமையில் பறக்கும் படை அமைப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணியில் 507 இடங்கள், குரூப் 2ஏ பணியில் 1820 இடங்கள் என 2,327 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை எழுத்து தேர்வை நாளை (சனிக்கிழமை) நடத்துகிறது. இத்தேர்வை 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் எழுதுகின்றனர். இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 2763 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 2 தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள் இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 2763 தேர்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் (20 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோகிராப் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று, அதாவது 14ம் தேதி (நாளை) முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 9 மணிக்கு முன்னரே சென்று விடுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மாறாக வேறெந்த ஆவணமும் அனுமதிக்கப்படாது. மேலும், விண்ணப்பதாரர் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post நாளை குரூப் 2, 2ஏ தேர்வு சப்-கலெக்டர் தலைமையில் பறக்கும் படை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,TNPSC ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள்...