×
Saravana Stores

மது ஒழிப்பு மாநாடு ராமதாசுடன் கசப்பான அனுபவம் இருப்பதால் அழைக்கவில்லை: விசிக துணை பொதுச்செயலாளர் விலக்கம்

சேலம்: பாமக தலைவர் ராமதாசுடன் கசப்பான அனுபவம் இருப்பதால் விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாட்டிற்கு அழைக்கவில்லை என அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கூறினார். தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வன்னியரசு நிருபர்களிடம் கூறியதாவது:

விசிக சார்பில் அக்டோபர் 2ம் தேதி மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். அதுபோக மற்ற கட்சிகளில் இருந்து பெண் நிர்வாகிகளை அழைத்துள்ளோம். பாமக நிறுவனர் ராமதாஸ், மது ஒழிப்பு கொள்கை கொண்டவர். அவர்களை குறைத்து நாங்கள் பேசவில்லை. இதற்கு முன்பு ராமதாசுடன் எங்களுக்கு கசப்பான அனுபவம் உள்ளது.

ஈழத்தமிழர் விடுதலைக்காக திருமாவளவன் உண்ணாவிரத போராட்டம் அறிவித்து நடத்தியபோது, முதலில் வருவதாக ராமதாஸ் கூறியிருந்தார். பிறகு கடைசி நேரத்தில் வர முடியாது எனக்கூறிவிட்டார். இப்படி கசப்பான அனுபவம் இருப்பதனால், விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாட்டிற்கு நாங்கள் அவரை அழைக்கவில்லை. சேலத்தில் விசிக மண்டல செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதில் பங்கேற்க தலைவர் தொல்.திருமாவளவன் வருகிறார். சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளதால், அவரை திருமாவளவன் சந்திக்க போகிறாரா? என கேட்கிறீர்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post மது ஒழிப்பு மாநாடு ராமதாசுடன் கசப்பான அனுபவம் இருப்பதால் அழைக்கவில்லை: விசிக துணை பொதுச்செயலாளர் விலக்கம் appeared first on Dinakaran.

Tags : Ramadass ,Vishik ,Deputy Secretary-General ,Salem ,State deputy general secretary ,Vanniarasu ,Visika ,PMK ,Rama Das ,Periyar ,Salem Collector ,Liquor abolition ,Vishika deputy general secretary ,Dinakaran ,
× RELATED தெலுங்கர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த...