நன்றி குங்குமம் தோழி
*காலையில் வைக்கும் குருமா குழம்பில் சிறிதளவு புளியை சேர்த்துக் கொண்டால் குழம்பு இரவு வரை கெடாமலிருக்கும்.
*போளி தட்டும் போது வாழை இலையின் பின் பக்கமாகத் தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும்.
*கோதுமை மாவைக் கரைத்து அதில் ஒரு டம்ளர் மோர் ஊற்றிக் கலந்து தோசை வார்த்தால் அதன் சுவையே அலாதி.
தொகுப்பு: கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
*இஞ்சியை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து குலுக்கி வைத்தால் தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம். உணவும் எளிதில் ஜீரணமாகும்.
*காய்ந்த வரமிளகாயை வெயிலில் வைத்து எடுத்துப் பொடித்தால் நன்றாகவும், சீக்கிரமும் அரைபடும். கெட்டும் போகாது. மிளகாய் பொடியை அவ்வப்போது வெயிலில் வைத்து எடுத்தாலும் கெடாமல் இருக்கும்.
*ரசத்தில் கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்ப்பது போல முருங்கை இலைகளையும் சேர்க்கலாம். மணமாக இருக்கும்.
தொகுப்பு: எஸ்.ராஜம், திருச்சி.
*இரண்டு பங்கு பயத்தம் பருப்பு, ஒரு பங்கு பச்சரிசி கலந்து, உப்பு, பச்சைமிளகாய், பெருங்காயம் கலந்து ஊறவைத்து அரைத்து தோசை வார்த்தால் சுவை சூப்பர்தான்.
* தோசை தவாவில் எண்ணெய் தடவி, அப்பளத்தை போட்டு இருபுறமும் புரட்டி எடுத்தால் சுவையாக இருக்கும். எண்ணெய் செலவு குறையும். உடம்புக்கும் நல்லது.
*வெங்காயம், தக்காளி சம அளவு எடுத்து, பொடியாக நறுக்கி, தேவைக்கேற்ப உப்பு, நறுக்கிய பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து ஜாடியில் போட்டு குலுக்கி மூடி ஊறிய பிறகு தயிர் சாதத்துக்கும், டிபனுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
தொகுப்பு: ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்.
*பஜ்ஜி மாவில் நாலைந்து பூண்டுப் பற்களை அரைத்துச் சேர்த்து ஒரு ஸ்பூன் சீரகத் தூளையும் சேர்த்தால் டேஸ்ட்டாக இருக்கும்.
*தேங்காய் சட்னி அரைக்கும் போது பச்சை மிளகாயுடன் சிறு துண்டு இஞ்சி சேர்த்தால், சட்னி சுவை வித்தியாசமாக இருக்கும்.
*குக்கரில் கருணைக் கிழங்கை வேகவைத்து அதை மசால் வடை மாவுடன் சேர்த்து அரைக்கவும். வடை வித்தியாசமான சுவையில் இருக்கும்.
தொகுப்பு: எம்.ஏ.நிவேதா, திருச்சி.
*பழைய சாதத்துடன் உப்பு, காரப்பொடி சேர்த்து பிசைந்து சிறு சிறு துண்டுகளாக வெயிலில் காயவைத்து எண்ணெயில் போட்டு வைத்தால் வடகம் ரெடி.
*பொன்னாங்கண்ணிக் கீரையை நெய்விட்டு வதக்கி மிளகு, உப்பு சேர்த்து அரைத்தால் சுவையான துவையல் ரெடி.
*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது கொஞ்சம் சோம்புவை தூளாக்கி தூவினால் அருமையான சுவையும், மணமும் கிடைக்கும்.
தொகுப்பு: எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.
*மீன் சமையலின் போது கைகளில் நாற்றம் ஏற்படும். எலுமிச்சம் பழத்தை நறுக்கி கைகளில் தேய்த்து சோப்புப் போட்டு கைகளைக் கழுவினால் மீன் நாற்றம் போய் விடும்.
*தேங்காய் பொடி செய்யும் போது சிறிது புளியையும் எண்ணெயில் வறுத்து சேர்த்துக் கொண்டால் பல வாரங்கள் ஆனாலும் தேங்காய் பொடி மக்குவாடை அடிக்காமல் இருக்கும்.
தொகுப்பு: எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
*ரேஷன் அரிசி வாங்கும் போது பழுப்பு நிறமாக இருந்தால் சிறிது முழு உப்பைப் போட்டு சிறிது நேரம் நீரில் ஊறவைத்து பின் பல தடவை கழுவி சமைத்தால் பழுப்பு நிறமும் மாறிவிடும். புழு-பூச்சிகளும் அழிந்துவிடும். சாதம் சுவையாய் பழுப்பு நிறம் மாறி இருக்கும்.
*சாம்பார் தயாரிக்கும் போது பருப்பு வேகவைக்கும் போது பருப்புடன் ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து வேகவைத்தால் சாம்பார் சுவைக்கும்.
தக்காளியை அரைத்து சாம்பார் கொதிக்கும்போது ஊற்றி, வறுத்த வெந்தயப் பொடியையும் சிறிது சேர்த்தால் சாம்பார் சுவையோ சுவை.
*வெண்டைக்காய் சமைக்கும் போது காயுடன் தயிர் அல்லது எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் சேர்த்து வதக்கி, பின் சமைத்தால் வெண்டைக்காய் சமையல் ருசியோ ருசி.
தொகுப்பு: லட்சுமி, நாகர்கோவில்.
சோம்பு இலை புளி பச்சடி
தேவையானவை: சோம்பு இலை – 2, பச்சை மிளகாய் – 1, புளி – கோலி குண்டு அளவு. வெல்லம், மஞ்சள் தூள் – சிறிதளவு, கடுகு – தாளிக்க ½ டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை: சோம்பு இலைகளை நன்கு கழுவி பொடியாக நறுக்கவும். பின் தண்டு கனமாக இருந்தால் அதை நீக்கவும். பச்சை மிளகாயை கிள்ளி சேர்க்கவும். கடாயில் எண்ெணய் ஊற்றி கடுகு போட்டு, சோம்பு இலைகள், மிளகாய் சேர்த்து வதக்கவும். புளி கரைத்த நீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதித்ததும் வெல்லம் சேர்த்து இறக்கலாம்.
தொகுப்பு: பி.சுதா, சென்னை.
The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.